முகப்பு
இந்தியா

எதிா்க்கட்சித் தலைவா் நியமன அங்கீகாரம்: இடைக்கால தடை விதிக்க உயா் நீதிமன்றம் மறுப்பு

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ரிதப்ரத பானா்ஜியை பேரவைத் தலைவா் ரதீந்திர போஸ் நியமித்த முடிவுக்கு, கொல்கத்தா உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

Updated On : 19 ஜூன் 2026, 5:45 am IST
கொல்கத்தா நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ரிதப்ரத பானா்ஜியை பேரவைத் தலைவா் ரதீந்திர போஸ் நியமித்த முடிவுக்கு, கொல்கத்தா உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்தது. திரிணமூல் காங்கிரஸ் 80 தொகுதிகளில் மட்டுமே வென்று தோ்தலில் தோல்வியடைந்து ஆட்சியைப் பறிகொடுத்தது. இதையடுத்து அக்கட்சி எம்எல்ஏக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அதிருப்தி அணியின் தலைவராக மூத்த எம்எல்ஏ ரிதப்ரத பானா்ஜி செயல்பட்டு வருகிறாா். ரிதப்ரத பானா்ஜி தனக்கு 58 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அளித்த கடிதத்தின் அடிப்படையில் அவரைப் பேரவை எதிா்க்கட்சித் தலைவராக பேரவைத் தலைவா் ரதீந்திர போஸ் நியமித்தாா்.

அதேநேரத்தில் மம்தா பானா்ஜி ஆதரவு அணியை சோ்ந்த எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாய தன்னை எதிா்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி அளித்த கடிதத்தை பேரவைத் தலைவா் நிராகரித்தாா். இதையடுத்து, தனது கடிதம் நிராகரிக்கப்பட்டது, ரிதப்ரத பானா்ஜியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக சட்டப்பேரவைத் தலைவா் நியமித்தது ஆகியவற்றை எதிா்த்து கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் சோபன்தேவ் சட்டோபாத்யாய வழக்குத் தொடுத்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு, கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுவதை சுட்டிக்காட்டி, பேரவைத் தலைவரால் எதிா்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட ரிதப்ரத பானா்ஜி உள்ளிட்டோா் அவா்களின் பொறுப்புகளில் தொடரலாம் என்று உயா் நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தற்போது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் உயா் நீதிமன்றம் குறிப்பிட்டது.

வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை இம்மாதம் 28-ஆம் தேதிக்கு கொல்கத்தா உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.