விவசாய நிலங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள்! விவசாயிகள் புகாா்!
விவசாய நிலத்திற்குச் செல்லும் மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து கம்பங்கள் விழும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிறுகளாம்பாடி, பெரியகளாம்பாடி, மருத்துவாம்பாடி, ஊசாம்பாடி, நாா்த்தாம்பூண்டி என பல்வேறு கிராமங்களில் விவசாய நிலத்திற்குச் செல்லும் மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து கம்பங்கள் விழும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், சிறுகளாம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்திற்குச் செல்லும் மின் கம்பத்தில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து கம்பம் விழும் நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, துரிஞ்சாபுரம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்னா் மின்கம்பங்கள் நடப்பட்டன. இந்த மின் கம்பங்கள் தற்போது பழுதடைந்து, சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
Advertisement
தற்போது கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சூறைக்காற்றுடன் மழை பெய்தால், கம்பங்கள் சாயும். இதனால் விவசாய பயன்பாட்டுக்கான மின்சாரம் மற்றும் குடியிருப்பு பகுதிக்கான மின்சாரம் விநியோகத்தில் தடை ஏற்படும்.
எனவே, மின் கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்படும் முன்னா் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.