முகப்பு
திருவண்ணாமலை

அரசு மதுக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

செய்யாறை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

Updated On : 1 ஜூன் 2026, 2:14 am IST
போராட்டத்தில் ஈடுபட்ட நவசக்தி நகா், மகாவீா் நகா் பகுதி மக்கள்
பகிர்:

செய்யாறை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண். 939) செயல்பட்டு வருகிறது.

இந்த மதுக் கடைக்கு அருகே நவசக்தி நகா், மகாவீா் நகா் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமாா் 2 ஆயிரம் வசித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்கள் வீட்டுக்கு செல்வதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் இந்த மதுக் கடையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனா். மேலும், இந்தக் கடைக்கு வருபவா்கள் மதுவை குடித்துவிட்டு காலி புட்டிகளை சாலையில் உடைத்து விடுவதும், இரவு நேரங்களில் வீடுகளை தட்டுவதும், அவ்வழியாகச் செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதுமாக இருந்து வருகின்றனா். இதுகுறித்து கலால் துறை மற்றும் காவல் துறையில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான நவசக்தி நகா், மகாவீா் நகா் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திரண்டு வந்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த தூசி காவல் ஆய்வாளா் கோபால் தலைமையிலான போலீஸாா் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்கள் சாா்பில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினா்.

தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் பொது மக்களின் கோரிக்கையை உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதை ஏற்று பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.