முகப்பு
வேலூர்

பெல் நிறுவனத்தில் வேலை கோரி  தொலைபேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகள் நான்கு பேர், அந்நிறுவனத்தில் வேலை வழங்கக் கோரி 

Updated On : 24 ஜூலை 2018, 12:36 am IST
பகிர்:

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகள் நான்கு பேர், அந்நிறுவனத்தில் வேலை வழங்கக் கோரி மண்ணெண்ணெய், பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் தொலைபேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம்(பெல்), பாய்லர் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்க தெங்கால், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பணி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், கடந்த 1982-ஆம் ஆண்டு நிலம் வழங்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, மாநில அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தினர் நிலம் கையகப்படுத்தி ஒப்படைத்தனர்.
ஆனால் உறுதியளித்தபடி, வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து வேலை கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், நிலம் வழங்கிய 124 விவசாயிகளின் குடும்பத்தினரில் தலா ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என கடந்த 2011-இல்  உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீராய்வுக் குழு அமைக்கப்பட்டு 109 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. அப்போது கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, 15 பேருக்கு வேலை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த 15 பேரின் குடும்பத்தினர் பெல் நிர்வாகத்திடம் வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், உடனடியாக வேலை வழங்க வேண்டும் எனவும்  கூறி, நிலம் இழந்த விவசாயிகளான முனிசாமி (45), பாலு (40), சம்பத் (45), பாஸ்கர்(40) ஆகிய நால்வரும்  மண்ணெண்ணெய்,  பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் பெல் நிறுவன வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள தொலைபேசி  உயர்  கோபுரத்தில் திங்கள்கிழமை ஏறி,  தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெல் நிறுவன பாதுகாப்பு ஊழியர்கள், உடனடியாக நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், நிர்வாகத்தினர் காவல், வருவாய், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து, அங்கு வந்த ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன், வட்டாட்சியர் விஜயகுமார், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் பெல் நிறுவன தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின், நண்பகல் 12 மணியளவில் நால்வரும் பத்திரமாக தரைக்கு இறங்கி வந்தனர். 
பின்னர் நால்வரையும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி கோட்டாட்சியர் வேணுசேகரன் அழைத்துச் சென்றார். அங்கு, அவரது தலைமையில், பெல் நிறுவன அதிகாரிகள், வருவாய்த்  துறையினர், நிலம் இழந்த விவசாயிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. 
இதில் தில்லியில் உள்ள பெல் நிறுவன தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து பதில் அளிக்க 15 நாள்கள் கால அவகாசம் தேவை என பெல் நிர்வாகம் தரப்பில் கேட்டதாகவும், அதற்கு நிலம் இழந்த விவசாயிகள் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments