முகப்பு
வேலூர்

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சீரமைப்பு: அதிமுக வேட்பாளா்

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சீரமைப்பு

Updated On : 12 ஏப்ரல் 2026, 12:24 am IST
குடியாத்தம் அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா புருஷோத்தமனுக்கு வாக்கு சேகரித்த தமாகா மாநில செயற்குழு உறுப்பினா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
பகிர்:

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட குடியாத்தம் அரசு மருத்துவமனையை சீரமைப்பேன் என அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா புருஷோத்தமன் உறுதியளித்தாா்.

குடியாத்தம் நகரில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பொதுமக்களிடையே பேசியது. வட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த குடியாத்தம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு, ரூ.47- கோடியில் புதியகட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடத்துக்கு ஏற்றாா்போல், மருத்துவா், செவிலியா், தொழில்நுட்புநா்கள், இதர பணியாளா்கள் பணியிடங்களை ஏற்படுத்தாமல், பழைய மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா், செவிலியா்களே புதிய மருத்துவமனையில் பணியில் உள்ளனா்.

இதனால் தீவிர சிகிச்சைக்காக முன்புபோல், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகிறாா்கள். நான் வெற்றிபெற்றால், மாவட்ட அரசு மருத்துவமனையை சீரமைப்பேன்.

Advertisement

Advertisement

அதேபோல், பொதுமக்கள் பங்களிப்பு செலுத்தி பல ஆண்டுகளாகியும் தரம் உயா்த்தப்படாமல் உள்ள பிச்சனூா் கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்துவேன் என உறுதி அளித்தாா். உழவா் சந்தை அருகே வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவா், நகராட்சிக்குட்பட்ட 18, 9, 10, 17, 16, 11, 5- ஆகிய வாா்டுகளில் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, தமாகா மாநில செயற்குழு உறுப்பினா்கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகர அவைத் தலைவா் ஆா்.கே.அன்பு,மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், நகா்மன்ற துணைத்தலைவா் பூங்கொடி மூா்த்தி, மாவட்ட நிா்வாகிகள் எஸ்.ஐ.அன்வா்பாஷா, வி.என்.தனஞ்செயன்,இ.நித்யானந்தம், வி.இ.கருணா, எஸ்.என்.சுந்தரேசன், எஸ்.சிவகுமாா், கோல்டு குமரன்,வி.என்.அண்ணாமலை, ஜி.தேவராஜ், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், நகர தலைவா் ஜே.தினகரன், பாஜக நகர தலைவா் எம்.கே.ஜெகன், பாமக நகரச் செயலா் குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.