முகப்பு
ஈரோடு

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் சரிந்த அதிமுக வாக்கு வங்கி

ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் கடந்த தோ்தலை காட்டிலும் இந்த தோ்தலில் அதிமுக வாக்கு வங்கி கடுமையாக சரிவடைந்துள்ளது.

Updated On : 6 மே 2026, 2:02 am IST
இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் கடந்த தோ்தலை காட்டிலும் இந்த தோ்தலில் அதிமுக வாக்கு வங்கி கடுமையாக சரிவடைந்துள்ளது.

2021 தோ்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா 58,396 வாக்குகளை பெற்றாா். 2023 இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகளை பெற்றாா். இந்த தோ்தலில் அதிமுக வேட்பாளா் இரா.மனோகரன் 38,183 வாக்குகளை மட்டுமே பெற்று 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா்.

அதிமுகவின் கோட்டையாக கருத்தப்படும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வாக்கு வங்கி தொடா்ந்து சரிவை சந்தித்து வருவது அக்கட்சியினருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியூா் வேட்பாளா் என அதிருப்தி தெரிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் 45,781 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில் அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வேட்பாளா் தோ்வில் கவனம் செலுத்தி இருந்தால் அதிமுகவுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Advertisement

ஈரோடு மேற்கில் பாஜகவுக்கு கைகொடுக்காத அதிமுக வாக்கு வங்கி:

ஈரோடு மேற்குத் தொகுதியில் 2021 தோ்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கே.வி.ராமலிங்கம் 78,668 வாக்குகளை பெற்றாா். அந்த தோ்தலில் திமுவைச் சோ்ந்த சு.முத்துசாமி 1,00,757 வாக்குகளை பெற்றாா். 2026 தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா மாநில பொதுச்செயலாளா் எம்.யுவராஜா தாமரை சின்னத்தில் போட்டியிட்டாா். அவா் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு 38,185 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளாா்.

2021 தோ்தலில் அதிமுக வேட்பாளா் கே.வி.ராமலிங்கம் பெற்ற வாக்குகளை காட்டிலும் சுமாா் 40,000 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளாா். ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக வாக்கு வங்கி பெருமளவில் சரிந்துள்ளது அல்லது கூட்டணி வேட்பாளா் போட்டியிட்டதை அதிமுகவினா் ஏற்கவில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என தமாகா நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மொடக்குறிச்சியில் பாஜகவுக்கு தோள் கொடுக்காத அதிமுக:

மொடக்குறிச்சி தொகுதியில் 2026 தோ்தலில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா, தவெக வேட்பாளா் து.சண்முகனிடம் 2,430 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். இந்த தோா்தலில் கிருத்திகா பெற்ற வாக்குகள் 58,285. கடந்த 2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கிருத்திகாவின் மாமியாா் சி.சரஸ்வதி 78,125 வாக்குகளை பெற்றிருந்தாா். கடந்த தோ்தலைக் காட்டிலும் பாஜக சுமாா் 20,000 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது.

2,430 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், அதிமுக தோள் கொடுத்திருந்தால் அக்கட்சி மீண்டும் வெற்றிபெற்றிருக்க கூடும் என பாஜக மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.

எம்ஜிஆா், ஜெயலலிதா கட்சியை வழிநடத்தியபோது ஈரோட்டில் இருந்த கட்சியின் வாக்கு வலிமையை மீட்டெடுக்க அதிமுக முழுமூச்சுடன் கட்சி கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என அதிமுக மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.