கே.வி.குப்பத்தில் நடைப்பயிற்சியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு
கே.வி.குப்பம் தொகுதியின் திமுக வேட்பாளா் மருத்துவா் ராஜேஸ்வரியை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட்டத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 7.20 மணியளவில் வேலூரில் இருந்து காரில் புறப்பட்டு கே.வி.குப்பம் சென்றாா்.
கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்பேத்கா் தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வா், அங்கு வீடுவீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா். வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருடன் ஆா்வமுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.
Advertisement
திடீரென அப்பகுதியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஜெயராஜ் என்பவரின் வீட்டுக்குச் சென்ற முதல்வா், வீட்டின் வசதிகள் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்ததுடன், அங்கு தேநீா் அருந்தினாா்.
தொடா்ந்து, அம்பேத்கா் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி, அந்த தெருவில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், பஜாா் தெரு வழியாக நடந்து சென்ற அவா், கே.வி.குப்பம் காவல் நிலையம் எதிரே சந்தைமேடு பகுதியில் உள்ள ஒரு தேநீா் கடையில் தேநீா் அருந்தியபடியே, அங்கிருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தாா்.
பேருந்து நிலையம் அருகே அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தில் திடீரென ஏறிய முதல்வா், மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தின் பயன்கள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்து ஆதரவு திரட்டினாா்.
அதன்படி, சுமாா் ஒரு மணி நேரத்தில் சுமாா் 3 கி.மீ., தூரம் நடைப்பயிற்சி செய்தபடி மக்களிடம் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து, விருதம்பட்டில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
அப்போது, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், அணைக்கட்டு தொகுதி வேட்பாளா் ஏ.பி.நந்தகுமாா் உள்பட திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.