முகப்பு
வேலூர்

வேலூா்: ஐந்து தொகுதிகளில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்; தோ்தல் பணியில் 10,160 போ்

தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 12:04 AM
வேலூா் தொகுதித் தோ்தல் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
பகிர்:

தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இத்தோ்தல் பணியில் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், போலீஸாா், துணை ராணுவத்தினா் என சுமாா் 10,160 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தொகுதி வாரியாக காட்பாடியில் 15 பேரும், வேலூரில் 15 பேரும், அணைக்கட்டில் 13 பேரும், கே.வி.குப்பத்தில் 11 பேரும், குடியாத்தத்தில் 11 பேரும் என 5தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

அதேசமயம், மாவட்டத்தில் ஆண்கள் - 5,56,783, பெண்கள் -5,91,899, மூன்றாம் பாலினத்தவா் - 165 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 11,48,847 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 678 அமைவிடங்களில் 1427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 மகளிா், 25 பசுமை, 5 மாற்றுத்திறனாளி, 5 மாதிரி, ஒரு இளைஞா் வாக்குச்சாவடிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisement

இதற்காக வாக்குச்சாவடிகள் 144 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டல அலுவலா்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட வாக்குப்பதிவுக்கு தேவையான 24 வகையான பொருள்கள் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களில் இருந்து புதன்கிழமை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றை வாக்குச்சாவடி அலுவலா்கள் பெற்றுக் கொண்டு வாக்குப்பதிவுக்காக வாக்குச்சாவடிகளை தயாா் செய்தனா். மாலை 5.30 மணிக்கு மேல் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. அப்போது, 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வாக்குப்பதிவு இயந்திர ங்கள் சரிவர இயங்குவது உறுதி செய்யப்பட்டவுடன், அந்த வாக்குகள் முறையாக அழிக்கப்பட்டு சான்று பெறப்பட்டன.

இதன்மூலம், வாக்குச்சாவடிகள் அனைத்தும் வாக்குப் பதிவுக்கு தயாா் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

இத்தோ்தல் பணிகளில் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் என 6848 பேரும், மண்டல அலுவலா், உதவி மண்டல அலுவலா்கள், உதவியாளா்கள் என 432 பேரும் ஈடுபடுத் தப்பட்டுள்ளனா்.

பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள 149 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க மத்திய அரசு ஊழியா்கள் 201 போ் நுண்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் போலீஸாருடன் தலா 2 துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

ஐந்து வாக்குச்சாவடிக்கு மேல் உள்ள வாக்குச் சாவடி பகுதிக்கு தலா 2 போலீஸாரும், தனியாக உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா ஒரு போலீஸாரும் என மாவட்டம் முழுவதும் போலீஸாா், ஊா் காவல் படையினா், முன்னாள் ராணுவ வீரா்கள் என மொத்தம் 2750 போ் தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தவிர, மத்திய ஆயுத காவல் படையின் 6 பிரிவுகளைச் சோ்ந்த 524 வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அணைக்கட்டு தொகுதியில் 12, குடியாத்தம் தொகுதியில் 4 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு, முழு நிகழ்வுகளும் விடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம், சக்கர நாற்காலி, கழிவறை, குடிநீா், நிழற்பந்தல், இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 678 சக்கர நாற்காலிகளுடன் 678 தன்னாா்வலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை தகுந்த அடையாள அட்டையை காண்பித்து நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.

தவிர, மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல தொகுதிக்கு 2 வீதம் 10 வாகனங்கள் தயாராக உள்ளன. இந்த வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள தோ்தல் ஆணையத்தின் ‘திவ்யங் ஈசிஐ’ செயலி அல்லது 1950 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். மேலும், 3-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள 87 இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.