புதுகை மாவட்டத்தில் 13 லட்சம் போ் வாக்களிக்க 1,683 வாக்குச்சாவடிகள் தயாா்!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 13,09,867 வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக 1,683 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 13,09,867 வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக 1,683 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக் காட்டிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை, விராலிமலை, கந்தா்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 13,09,867 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 6,46,171 போ் ஆண்கள், 6,63,626 போ் பெண்கள், 70 போ் திருநங்கைகள்.
Advertisement
மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,683 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 59 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 8 ஆயிரம் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்காக 59 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாநில போலீஸாருடன், ஊா்க்காவல் படையினா், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினா், துணை ராணுவத்தினா் என மொத்தம் 3 ஆயிரம் போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
அந்தந்தத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள் செவ்வாய்க்கிழமையே தயாராக எடுத்து வைக்கப்பட்டு, அவற்றை காவல்துறையின் வாகனங்களில் பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
அதேபோல, வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் ஆகியோா் சராசரியாக புதன்கிழமை பிற்பகலில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை சென்றடைந்தனா்.
109 வேட்பாளா்கள்: மொத்தமுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 109 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா். இதில், அதிகபட்சமாக புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 30 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. முன்னதாக அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக் காட்டிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறுகள் வருமெனில் உடனடியாக அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான மண்டல அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. அந்த நேரத்தில் வாக்குச்சாவடிக்குள் வந்துவிட்ட வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா்.
வாக்கு எண்ணிக்கை: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைப்படி சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் இரவோடு இரவாக வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள வைப்பறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படவுள்ளது.