புறவழிச் சாலைத் திட்டம்: விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு
பொள்ளாச்சியில் அமையவுள்ள நான்குவழி புறவழிச் சாலை திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சியில் அமையவுள்ள நான்குவழி புறவழிச் சாலை திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு சார்-ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் முத்துடையார் முன்னிலை வகித்தார். ஆச்சிபட்டி, கிட்டசூராம்பாளையம், குரும்பபாளையம், புளியம்பட்டி, அனுப்பர்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், புறவழிச் சாலை அமைப்பது குறித்து ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும், விவசாய நிலங்கள் வழியாக சாலை அமைப்பதற்குப் பதிலாக மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தரப்பில் பொள்ளாச்சியில் அதிகப் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், இந்தப் புறவழிச் சாலை அமைப்பது மிகவும் அவசியம் எனத் தெரிவித்தனர்.
மேலும், ஆட்சேபனைகள் இருப்பின் தனி வட்டாட்சியர், தேசிய நெடுஞ்சாலைத் துறை, பிளாட் எண் 6. 2ற 304ஏ, அருட்செல்வர் நகர், ஊஞ்சவேலாம்பட்டி, பொள்ளாச்சி என்ற முகவரியில் தெரிவிக்கலாம். இத்திட்டத்திற்காக கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும்போது அதற்கு இழப்பீடாக ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் நிலவும் சந்தை மதிப்பில் இருந்து 2.25 மடங்கும், நகரப் பகுதிகளில் 2 மடங்குத் தொகையும் இழப்பீடாக வழங்கப்படும். நிலம் கையகப்படுத்தப்படும் இடங்களில் உள்ள வீடுகள், கட்டடங்கள், கிணறு, ஆழ்துளைக் கிணறு, தென்னை மரங்கள், பிறவகை மரங்கள் என அனைத்திற்கும் அதன் மதிப்பில் இருந்து இரண்டு மடங்குத் தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.