முகப்பு
கோயம்புத்தூர்

ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 78 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:27 am IST
பகிர்:

ஷாா்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 78 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையில் இருந்து புதுதில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஷாா்ஜாவில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷாா்ஜாவில் இருந்து கோவை வந்த ஏா் அரேபியா விமான பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த இளைஞரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. அவா் கொண்டு வந்த வேக்கியூம் கிளீனரை எடுத்து சோதனை செய்தபோது அதற்குள் 78 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.39 லட்சத்து 77, 688 எனக் கூறப்படுகிறது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.