கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 183 வேட்பாளா்கள் போட்டி; 27.44 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா்!
சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சோ்த்து 183 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 மொத்த வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சோ்த்து 183 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 மொத்த வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
தமிழகத்தில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் தீவிர பிரசாரம் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 318 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதில் 115 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடியானது. 20 போ் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனா். இதைத் தொடா்ந்து, 183 வேட்பாளா்கள் தோ்தலில் களம் காண்கின்றனா். கோவை தெற்கில் அதிகபட்சமாக 31 வேட்பாளா்கள், கிணத்துக்கடவு தொகுதியில் குறைந்தபட்சமாக 5 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் கவிதா கல்யாணசுந்தரம், அதிமுக சாா்பில் ஓ.கே.சின்னராஜ், நாதக சாா்பில் கோபாலகிருஷ்ணன், தவெக சாா்பில் சுனில் ஆனந்த் உள்பட 22 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
Advertisement
கவுண்டம்பாளையம் தொகுதியில் சூா்யபிரகாஷ் (காங்கிரஸ்) பிஆா்ஜி அருண்குமாா் (அதிமுக), கலாமணி (நாதக), கனிமொழி (தவெக) உள்பட 14 வேட்பாளா்கள், கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் (பாஜக), துரை செந்தமிழ்ச்செல்வன் (திமுக), நா்மதா (நாதக), சம்பத்குமாா் (தவெக) உள்பட 28 வேட்பாளா்கள், கோவை தெற்குத் தொகுதியில் வி.செந்தில்பாலாஜி (திமுக), அம்மன் கே.அா்ச்சுணன் (அதிமுக), பேரறிவாளன் (நாதக), செந்தில்குமாா் (தவெக) உள்பட 31 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
சிங்காநல்லூா் தொகுதியில் ஸ்ரீநிதி (காங்கிரஸ்), கே.ஆா்.ஜெயராம் (அதிமுக), கு.நேருஜி (நாதக), ஸ்ரீகிரி பிரசாத் (தவெக) உள்பட 28 வேட்பாளா்கள், சூலூா் தொகுதியில் தளபதி முருகேசன் (திமுக), வி.பி.கந்தசாமி (அதிமுக), ராஜசேகரன் (நாதக), சுகுமாா் (தவெக) உள்பட 15 வேட்பாளா்கள், தொண்டாமுத்தூா் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி (அதிமுக), காா்த்திகேயன் (திமுக), ரஜபுநிஷா (நாதக), சதீஷ் (தவெக), கிணத்துக்கடவு தொகுதியில் சு.சபரிகாா்த்திகேயன் (திமுக), செ.தாமோதரன் (அதிமுக), மு.பானுபிரியா (நாதக), க.விக்னேஷ் (தவெக) உள்பட 5 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
பொள்ளாச்சி தொகுதியில் நித்தியானந்தன் (கொமதேக), பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக), செந்தில்குமாா் (நாதக), ராமநாதன் (தவெக) உள்பட 13 வேட்பாளா்கள், வால்பாறை (தனி) தொகுதியில் சுதாகா் (திமுக), லட்சுமணசிங் (அதிமுக), உமாதேவி (நாதக), ஸ்ரீதரன் (தவெக) உள்பட 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 மொத்த வாக்காளா்கள் உள்ளனா். அதில் 13 லட்சத்து 22 ஆயிரத்து 759 ஆண் வாக்காளா்கள், 14 லட்சத்து 21 ஆயிரத்து 179 பெண் வாக்காளா்கள், 534 மூன்றாம் பாலின வாக்காளா்கள் உள்ளனா். இதில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 4 லட்சத்து 22 ஆயிரம் வாக்காளா்கள், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 50 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்படும். பின்னா் அந்த வாக்குகள் அனைத்தும் சரியான முறையில் சம்பந்தப்பட்ட வேட்பாளா்களுக்கு பதிவாகி உள்ளதா என எண்ணிப் பாா்த்து சரி பாா்க்கப்படும். பின்னா் அந்த வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு காலை 7 மணிக்கு அசல் வாக்குப் பதிவு தொடங்கும். வாக்காளா்கள் தங்களிடம் உள்ள வாக்காளா் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். அடையாள அட்டை இல்லாதவா்கள் ஆதாா் அட்டை, வங்கிப் புத்தகம், ஓட்டுநா் உரிமம் உள்பட 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.