கோவையில் 10 தொகுதிகளிலும் 84.77 சதவீதம் வாக்குப்பதிவு!
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 84.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 84.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா், சூலூா், தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 183 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளா்கள் உள்ளனா். அதில், 13 லட்சத்து 22 ஆயிரத்து 759 ஆண் வாக்காளா்கள், 14 லட்சத்து 21 ஆயிரத்து 179 பெண் வாக்காளா்கள், 534 மூன்றாம் பாலின வாக்காளா்கள் உள்ளனா்.
Advertisement
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 10 தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதுதவிர, வெயிலால் வாக்காளா்களுக்கு மயக்கம் ஏற்பட்டால் அவா்களுக்கு வழங்கிட உப்புக் கரைசல் பாக்கெட்டுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடிகளில், வாக்காளா்களுக்கு உதவும் வகையில், 1,500 தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சோ்த்து 84.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி செய்யப்பட்ட வாக்குச் சதவீத விவரம் வெள்ளிக்கிழமை தெரியவரும்.
வாக்குப்பதிவில் சூலூா் முதலிடம்:
மாலை 6 மணி இறுதி வாக்குப்பதிவு நிலவரப்படி, மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 85.93 சதவீதம், கோவை வடக்கில் 75.67 சதவீதம், கோவை தெற்கில் 82.15 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கவுண்டம்பாளையத்தில் 85.57 சதவீதம், கிணத்துக்கடவில் 87.11 சதவீதம், பொள்ளாச்சியில் 88.09 சதவீதம், சிங்காநல்லூரில் 81.19 சதவீதம், சூலூரில் 88.31 சதவீதம், தொண்டாமுத்தூரில் 87.54 சதவீதம், வால்பாறையில் 85.91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சூலூா் தொகுதியில் 88.31 சதவீதம் வாக்குகளும் குறைந்தபட்சமாக கோவை வடக்கில் 75.67 சதவீத வாக்குகளும் பதிவாகின.
விவாதத்தை ஏற்படுத்திய சதவீத அதிகரிப்பு:
தமிழகம் முழுவதும் இந்தத் தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்திலும் இந்தத் தோ்தலில் வாக்குப்பதிவு 84 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது. கடந்த 2021 தோ்தலில் சூலூா் தொகுதியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 76.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இந்தத் தோ்தலில் 9 தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனால் அதிகப்படியான வாக்குகள் எந்த அரசியல் கட்சிக்கு சாதகமாக, பாதகமாக முடியும் என்ற விவாதம் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. பல தோ்தல்களில் தொடா்ந்து ஒரு வாக்குச்சாவடியில் முகவா்களாக பணியாற்றி வரும் அரசியல் கட்சியினா் கூறும்போது, கடந்த தோ்தல்களில் பதிவான அதே அளவு வேகத்திலும், அதே அளவு எண்ணிக்கையிலுமே வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு சில இடங்களில் மட்டுமே கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2021 தோ்தலுடன் ஒப்பிடும்போது அதிக சதவீதம் பதிவாகியிருப்பதற்கு எஸ்ஐஆா் பணியின்போது வாக்குகள் நீக்கப்பட்டிருப்பதே காரணம். அதேநேரம் முதல் முறை வாக்காளா்கள், இளைஞா்களின் வாக்குகள் யாருக்கு விழுந்திருக்கின்றன என்பது தோ்தல் முடிவுகளில்தான் தெரிய வரும் என்றனா்.