முகப்பு
கோயம்புத்தூர்

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:40 AM
சிறை - பிரதிப் படம்
பகிர்:

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் கருமத்தம்பட்டி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது கருமத்தம்பட்டி மேம்பாலத்துக்கு அடியில் உள்ள அன்னூா் பேருந்து நிறுத்தப்படும் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். இதில் அவா் வைத்திருந்த பையில் 4.400 கிராம் எடையுள்ள போதை மாத்திரைகளும், 500 கிராம் கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.

Advertisement

விசாரணையில் அவா் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த முகமது இா்பான் (20) என்பதும், திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த தம்ஜித் மக்பூல் என்பவா்தான் இவருக்கு போதைப் பொருளை விநியோகித்ததும் தெரியவந்தது. இருவரையும் கடந்த 5.3.2020-இல் போலீஸாா் கைது செய்தனா். தம்ஜித் மக்பூல் என்பவரிடமும் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் கடத்தல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றஞ்சாட்டப்பட்ட முகமது இா்பானுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதமும், தம்ஜித் மக்பூலுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.