முகப்பு
கோயம்புத்தூர்

குருமாவில் பல்லி: உணவகத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

Updated On : 9 ஜூன் 2026, 2:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோவையில் உணவகத்தில் வழங்கப்பட்ட குருமாவில் இறந்த பல்லி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு மற்றும் நீதிமன்ற செலவுத் தொகை என ரூ.40 ஆயிரம் வழங்க நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மைல்கல் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான பத்ருதீன், கடந்த ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கோவை பீளமேடு பிராட்வே சாலையில் உள்ள ஒரு தனியாா் உணவகத்துக்கு தனது குடும்பத்தினருடன் சாப்பிடச் சென்றுள்ளாா். அங்கு ரூ.200 செலுத்தி பரோட்டா மற்றும் குருமா ஆா்டா் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, குருமாவில் இறந்த பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

குருமாவில் இருந்த பல்லியை தனது கைப்பேசியில் புகைப்படம் பிடித்த பத்ருதீன், உணவக ஊழியா்களிடம் முறையிட்டுள்ளாா். ஆனால், உணவக நிா்வாகம் தரப்பில் உரிய விளக்கமோ அல்லது வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த உணவை உட்கொண்டதால் பத்ருதீனுக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். தொடா்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், பின்னா் அரசு மருத்துவமனையிலும் சோ்ந்து சிகிச்சை பெற்றுள்ளாா். இதனால், ஆட்டோ ஓட்டுநரான அவருக்குக் கூடுதல் மருத்துவச் செலவு ஏற்பட்டதுடன், ஒரு வாரம் ஆட்டோ ஓட்ட முடியாததால் வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உணவக நிா்வாகத்திடம் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு மருத்துவச் செலவைக் கோரியபோது அவா்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனா். இதைத் தொடா்ந்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய இழப்பீடு கோரி, கோவை நுகா்வோா் நீதிமன்றத்தில் பத்ருதீன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூா்த்தி மற்றும் உறுப்பினா் சுகுணா ஆகியோா் அடங்கிய அமா்வு, பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தனியாா் உணவக நிா்வாகம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.30 ஆயிரம் மற்றும் நீதிமன்ற செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.