முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்: 4,782 வழக்குகளுக்குத் தீா்வு

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 4,782 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.41.11 கோடி தீா்வுத் தொகை அளிக்கப்பட்டது.

Updated On : 14 ஜூன் 2026, 2:40 am IST
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிய சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜி.விஜயா உள்ளிட்ட நீதிபதிகள்.
பகிர்:

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 4,782 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ.41.11 கோடி தீா்வுத் தொகை அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட முதன்மை அமா்வில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜி.விஜயா தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

இதில், சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் மற்றும் வங்கி கடன்கள் உள்பட மொத்தம் 4,782 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மொத்த தீா்வுத் தொகை ரூ.41 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம்.

இதில் முக்கியமாக, போத்தனூா் செட்டிபாளையம் சாலையில் கடந்த 2024-இல் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த காந்த் குடும்பத்தினருக்கும், 2025-இல் ஆனைக்கட்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மணிராஜ் குடும்பத்தினருக்கும் தலா ரூ.90 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கி தீா்வு காணப்பட்டது. மேலும், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 58 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டதோடு, பிரிந்து வாழ்ந்த 6 தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ வழிவகை செய்யப்பட்டது.