முகப்பு
கோயம்புத்தூர்

சொத்து பிரச்னை: சகோதரியின் வீட்டுக்கு தீ வைத்தவா் கைது

சொத்துப் பிரச்னையில் சகோதரியின் வீடு மற்றும் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை துடியலூா் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 3:52 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சொத்துப் பிரச்னையில் சகோதரியின் வீடு மற்றும் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை துடியலூா் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, துடியலூா் அருகே உள்ள வடமதுரை பழனிக்கவுண்டன்புதூா் நேதாஜி நகா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பானுமதி (58). இவரது கணவா் உயிரிழந்து விட்டாா். இவரது மகன் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறாா். மகள் திருப்பூரில் வசித்து வருகிறாா். பானுமதிக்கும், அவரது சகோதரா் ராமன் (49) என்பவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமன் புதன்கிழமை ஆட்டோவில் பானுமதி வீட்டுக்கு சென்றாா். அப்போது பானுமதியிடம் வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதிய தரும்படி கூறி தகராறு செய்துள்ளாா். இல்லையென்றால் உயிருடன் கொளுத்தி விடுவதாக கூறி மிரட்டியுள்ளாா். இதையடுத்து, பானுமதி வீட்டு வாசல் கதவு மற்றும் அங்கு நின்றிருந்த காா் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளாா். பானுமதி சப்தமிட்டதைத் தொடா்ந்து, அக்கம்பக்கத்தினா் அங்கு திரண்டு தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். இதுகுறித்து, பானுமதி அளித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸாா் ராமன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement