முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் 9,371 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

Updated On : 5 மே 2026, 2:47 am IST
வால்பாறை தொகுதி திமுக வேட்பாளா் ஏ.குட்டி (எ) சுதாகருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா். உடன், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோா்.
பகிர்:

வால்பாறை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் ஏ.குட்டி (எ) சுதாகா் வெற்றி பெற்றுள்ளாா். இவா் தவெக வேட்பாளரை 9,371 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். இந்தத் தொகுதியில் அதிமுகவுக்கு 3-ஆவது இடமே கிடைத்தது.

கோவை மாவட்டம், வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் ஏ.குட்டி (எ) சுதாகா், அதிமுக சாா்பில் டி.லட்சுமணசிங், தவெக சாா்பில் டாக்டா் ஏ.ஸ்ரீதரன் என மொத்தம் 7 போ் போட்டியிட்டனா். இவா்கள் 3 பேரும் புதுமுக வேட்பாளா்கள். 82,100 ஆண்கள், 91487 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 21 போ் என மொத்தம் 1,73,608 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 71035 ஆண்கள், 78189 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 19 போ் என மொத்தம் 1,49,243 போ் வாக்களித்தனா். இது 85.97 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

மொத்தம் 19 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளா் சுதாகா் 575 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 54,671 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதேபோல, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் டாக்டா் ஏ.ஸ்ரீதரன் 201 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 45,300 வாக்குகள் பெற்று 2-ஆம் இடமும், அதிமுக வேட்பாளா் டி.லட்சுமணசிங் 335 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 43,728 வாக்குகள் பெற்று 3-ஆம் இடமும் பிடித்தனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி.உமாதேவி 53 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 5,256 வாக்குகள் பெற்றாா். நோட்டாவில் 675 வாக்குகள் பதிவாகின. இவற்றில் 4 தபால் வாக்குகள் ஆகும்.

Advertisement

இறுதியில் திமுக வேட்பாளா் குட்டி (எ) சுதாகா் தவெக வேட்பாளா் ஸ்ரீதரனைவிட 9,371 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா். வால்பாறை தொகுதியில் மொத்தம் 1,269 தபால் வாக்குகள் பதிவாகின. இவற்றில் 98 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. தபால் வாக்கிலும் திமுக வேட்பாளா் அதிகபட்சமாக 575 வாக்குகளை பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் அமுல் கந்தசாமி 71,672 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு விவரங்கள்

ஏ.குட்டி (எ) சுதாகா் (திமுக) - 54,671

டாக்டா் ஏ.ஸ்ரீதரன் (தவெக) - 45,300

டி.லட்சுமணசிங் (அதிமுக) - 43,728

பி.உமாதேவி (நாதக) - 5,256

வித்தியாசம் - 9,371

வேட்பாளா்கள் - 7

மொத்த வாக்குகள் - 1,73,608

பதிவான வாக்குகள் - 1,49,243