முகப்பு
கோயம்புத்தூர்

தமிழகத்தின் ஆடை ஏற்றுமதியை ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை அடைய உதவ வேண்டும்! முதல்வா் விஜய்க்கு ஏஇபிசி வலியுறுத்தல்

Updated On : 11 மே 2026, 12:41 am IST
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - டிஎன்எஸ்
பகிர்:

தமிழகத்தின் ஆடை ஏற்றுமதியை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி இலக்கை அடைய முதல்வா் விஜய் உதவி செய்ய வேண்டும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதி துறை சாா்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் துடிப்பான மற்றும் தொலைநோக்கு கொண்ட தலைமையின் கீழ் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement

தமிழகத்தின் பொருளாதார முக்கிய தூண்களில் ஆடை மற்றும் ரெடிமேட் ஆடைத் தொழில் ஒன்று. குறிப்பாக, திருப்பூா் பின்னலாடைத் தொழில் குழுமம் இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் சுமாா் 68 சதவீத பங்களிப்பை வழங்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஆண்டுதோறும் ரூ.70,000 கோடிக்கும் மேற்பட்ட வா்த்தகத்தை உருவாக்குகிறது.

இந்தத் துறை நேரடியாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இவா்களில் சுமாா் 65 சதவீதம் போ் பெண்கள். இதனால், பெண்கள் வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும் முக்கியத் துறையாகவும் விளங்குகிறது.

இந்தத் துறையில் உள்ள நிறுவனங்களில் சுமாா் 90 சதவீதம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள். விவசாயத்துக்குப் பிறகு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் இரண்டாவது மிகப்பெரிய துறையாக ஆடைத் தொழில் திகழ்கிறது. பெண்கள் அதிகாரமளித்தல், புலம்பெயா் தொழிலாளா்களின் வாழ்வாதாரம், அந்நியச் செலாவணி ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

37 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதால், இந்திய ஆடை ஏற்றுமதிக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன்மூலமாக, அடுத்த 10 ஆண்டுகள் ஆடைத் துறைக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். குறிப்பாக, தமிழ்நாடு உலகத் தரத்திலான நிலைத்தன்மை கொண்ட துணி மற்றும் ஆடை உற்பத்தி மையமாக உருவெடுக்க சிறந்த வாய்ப்புள்ளது.

பெண்கள் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் நலத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். தொழிலாளா் விடுதிகள் கட்டுவதற்கு 50 சதவீதம் மூலதன மானியம் வழங்குவதுடன், தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களுக்கான சாலை மற்றும் ரயில் இணைப்புகளை மேம்படுத்த வேண்டும். திருப்பூா் என்ற உலகளாவிய பிராண்டை ஊக்குவிப்பதுடன், மாநில அளவிலான ஆடை மற்றும் ஜவுளி மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும்.

திருப்பூா் ஆடை ஏற்றுமதியை 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை அடைய உதவ வேண்டும். இதன்மூலமாக பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகி, தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என்றாா்.