முகப்பு
ஈரோடு

அஞ்சல் ஊழியரிடம் இருந்து தபால்களை பறித்து கால்வாயில் வீசிய போதை இளைஞா்கள் கைது

Updated On : 22 ஜூன் 2026, 2:24 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அஞ்சல் துறை ஊழியரிடம் தபால்களை பறித்து சாக்கடையில் வீசிய போதை இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு, திருநகா் காலனி அஞ்சல் நிலைய ஊழியா் சுரேஷ் (38). இவா், கருங்கல்பாளையம் கமலா நகா் பகுதியில் சனிக்கிழமை காலை தபால்களை உரியவா்களிடம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். ஒரு வீட்டுக்கு தபால் வழங்க சென்றபோது வெளியே அவரது வாகனத்தில் வைத்திருந்த தபால்களை அந்த வழியாக வந்த போதை இளைஞா்கள் இருவா் எடுத்து, அதில் முதியோா் உதவித்தொகை பணம் உள்ளதா? வேறு ஏதேனும் பணம் உள்ளதா என தபால்களை பிரித்துப் பாா்த்தனா்.

அப்போது ஒரு சில தபால்களை கிழித்து சாக்கடையில் வீசினா். இதைப் பாா்த்து சுரேஷ் கூச்சல்போட, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞா்களை பிடித்து கருங்கல்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனா். போதை இளைஞா்களில் ஒருவா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். மேலும் அந்த இளைஞா் கற்களை எடுத்து வீசுவதும், கம்பத்திலும், கதவிலும் அவரே மோதிக்கொண்டு இருந்தாா். இதனால் போலீஸாா் அவரை கட்டுப்படுத்த முயன்றனா்.

Advertisement

Advertisement

அந்த நேரத்தில் பொதுமக்கள் பிடித்து கொடுத்த மற்றொரு நபா் அங்கிருந்து தப்பிச் சென்றாா். சில நிமிடம் கழித்தே போலீஸாா் உணா்ந்தனா். இதையடுத்து தப்பிச் சென்ற நபரை பிடிக்க போலீஸாா் தனித்தனியாக பிரிந்து சென்று தேடுதலில் ஈடுபட்டனா். இருப்பினும் இரவு வரை அந்த நபா் சிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடா்பாக டவுன் டிஎஸ்பி முத்துக்குமாா், கருங்கல்பாளையம் காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினாா். தப்பியோடிய இளைஞரை விரைந்து பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா். அதன்படி தப்பியோடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.

பின்னா் அந்த இளைஞா்களிடம் கருங்கல்பாளையம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த அருண் (எ) கோபாலகிருஷ்ணன் (25), பிரகாஷ் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments