காவிரி நீர் கண்டிப்பாக தமிழகத்துக்கு கிடைக்கும்: தமிழிசை சௌந்தரராஜன்
ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பின்னர் காவிரி நீர் தமிழகத்துக்கு கண்டிப்பாக கிடைக்கும்
ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குப் பின்னர் காவிரி நீர் தமிழகத்துக்கு கண்டிப்பாக கிடைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திரம் ஆகிய அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு பகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக புதன்கிழமை உதகைக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளாகவே காவிரி பிரச்னையில் தமிழகம் தனது உரிமைகளை இழந்து வருகிறது. இதற்கு முக்கிய பொறுப்பாளி திமுகதான். காவிரியிலிருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸாருடன் உறவு வைத்துக் கொண்டே தமிழகத்தில் திமுகவினர் போராட்டங்களை நடத்துவது வேடிக்கையாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுகவும், கம்யூனிஸ்டுகளும்தான் இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணமானவர்கள். காவிரி பிரச்னைக்கு பாஜகவால்தான் தீர்வு காண முடியும். இந்த தீர்வும் விரைவில் கிடைக்கும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என பிடிவாதம் காட்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையாதான் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால், அதே காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசருடன் இணைந்து காவிரி மீட்பு யாத்திரையை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நடத்துவது கண்டிக்கத்தக்கதாகும். காவிரி பிரச்னையில் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றுவதற்கு திமுகதான் முக்கிய காரணமாகும்.
காவிரி பிரச்னையில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இம்மாதம் 9-ஆம்தேதி வரவுள்ளது. அதன்பின்னர் காவிரி பிரச்னையில் உரிய தீர்வு காணப்படும். இது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ நடைமுறைக்கு வரும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் தமிழகத்துக்கான காவிரி நீரின் உரிமை கண்டிப்பாக பாதுகாக்கப்படும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக பாஜக ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. இதைக் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளதை மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. தமிழகத்தில் தற்போது நிலவும் குழப்பமான சூழலுக்கும், ஆளுநரின் தில்லி பயணத்துக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.