திருப்பூரில் கிளி ஜோதிடர் வெட்டிக் கொலை: துண்டுப் பிரசுரம் விநியோகித்துவிட்டு தப்பிய கொலையாளி
திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற கிளி ஜோதிடர் கொடூரமான முறையில் பட்டப்பகலில் அரிவாளால்
திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற கிளி ஜோதிடர் கொடூரமான முறையில் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தலைக்கவசம் அணிந்து வந்த கொலையாளி அப்பகுதியில் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துவிட்டுத் தப்பினார்.
திருப்பூரில் குமரன் சாலை அருகே பின்னி வணிக வளாகப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 12.45 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற நபரை தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால், காயமடைந்து கீழே விழுந்த அந்த நபரை மர்ம நபர் மீண்டும் சரமாரியாக வெட்டியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட முறை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால், அந்த நபர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர் அப்பகுதியில் சென்றவர்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துவிட்டுத் தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். விசாரணையில், கொல்லப்பட்டவர் மாநகராட்சிப் பூங்கா அருகே கிளி ஜோதிடம் பார்த்து வந்த இடுவாயைச் சேர்ந்த ஜெ.ரமேஷ் (எ) குமார் (36) என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகரின் மையப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம்
நிகழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பெண் விவகாரம் கொலைக்குக் காரணமா? கொலையாளி விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில், இடுவாயைச் சேர்ந்த ஜெ.ரமேஷ் (எ) குமார் கடந்த 14 ஆண்டுகளாகப் பூங்காவுக்கு வெளியே அமர்ந்து அங்கு வரும் பெண்களையும், காதலர்களையும் தீயசக்தியைப் (வசியம்) பயன்படுத்தி அவர்களைப் பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இவருக்குப் பின்னால் சில அரசியல்வாதிகள், சில முக்கியப் பிரமுகர்கள், சில காவல் துறை அதிகாரிகள், சில நிறுவனங்களின் முதலாளிகளும் உள்ளனர்.
எனக்கு கடந்த 9 ஆண்டுகளாக போயம்பாளையத்தில் வசிக்கும் பெண்ணுடன் தவறான பழக்கம் இருந்தது. இதன் மூலமாக மகனும் உள்ளான். இந்த நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து எங்களைப் பிரித்துவிட்டனர். இதன் பிறகு அந்தப் பெண், ஜோதிடரின் பிடியில் சிக்கித் தவித்து வந்தார். இந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்தி ஜோதிடருக்குப் பின்னால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இப்படிக்கு இவனால் பாதிக்கப்பட்டவன் என எழுதப்பட்டுள்ளது.
கொலையாளி தப்பியது எப்படி? தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஜோதிடரை அரிவாளால் ஆத்திரம் தீரும் வரையில் வெட்டிக் கொண்டே இருந்தது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இந்த விடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்ட நிலையிலும், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போதும் கொலையைத் தடுக்கவோ, அந்த நபரைப் பிடிக்கவோ யாரும் முன்வரவில்லை என்பதால் கொலையாளி எளிதாககத் தப்பிவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.