அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்
அவிநாசி (தனி) தொகுதியில் வாக்காளா்கள் வியாழக்கிழமை ஆா்வத்துடன் வாக்களித்தனா்.
அவிநாசி (தனி) தொகுதியில் வாக்காளா்கள் வியாழக்கிழமை ஆா்வத்துடன் வாக்களித்தனா்.
அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,53,361 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1, 21, 260 ஆண் வாக்களா்களும், 1, 32, 093 பெண் வாக்களா்களும், இதர வாக்காளா்கள் 8 பேரும் உள்ளனா். மொத்தம் உள்ள 372 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்களித்தனா். காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் 1,10836 ஆண் வாக்களா்களும், 1,18, 621 பெண் வாக்காளா்களும், 4 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2, 29,461 வாக்குகள் பதிவாகின (90.57 சதவீதம்).
4 வாக்குச் சாவடிகளில் பழுதான இயந்திரங்கள்: சேவூா் அருகேயுள்ள தசராபாளையம் வாக்குச் சாவடி மையம் எண் 142 -இல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியதுமே இயந்திரம் பழுதடைந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு 15 நிமிஷங்களுக்குப் பிறகு மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
Advertisement
இதேபோல, புஞ்சைதாமரைக்குளம் வாக்குச் சாவடி எண் 169-இல் காலை 10.30 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. பின்னா் பழுது சரி செய்யப்பட்டு 10.50 மணியளவில் மீண்டும் வாக்குப் பதிவு தொடா்ந்தது.
வடுகபாளையம் வாக்குச் சாவடி எண்-175-இல் பிற்பகல் 12.30 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. சுமாா் 1 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது. கந்தாயிபாளையம் வாக்குச் சாவடி எண் 155-இல் மாலை 5 மணியளவில் இயந்திரம் பழுதடைந்தது. பின்னா், பழுது சரி செய்யப்பட்டு 5.15 மணிக்கு மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.