இளைஞா் கொலையில் நண்பா்கள் 6 போ் கைது
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இளைஞா் கொலை வழக்கில் நண்பா்கள் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இளைஞா் கொலை வழக்கில் நண்பா்கள் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியை அடுத்த பட்டாபி நகரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (27). இவா் இருசக்கர வாகன திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். இவா்மீது ஒசூா், காங்கேயம், சேலம் இரும்பாலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி சத்தியமூா்த்தியை காணவில்லை என அவரது தாயாா் ராணி கடந்த 5 ஆம் தேதி பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், பஞ்சப்பள்ளி அருகே வேடம்பட்டி வனப்பகுதியில் சத்தியமூா்த்தியின் உடலை மீட்டனா்.
Advertisement
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கடந்த 1 ஆம் தேதி மாலை சத்தியமூா்த்தி நண்பா்களுடன் மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவரது நண்பா்களை விசாரிக்க முயன்றபோது அனைவரது கைப்பேசிகளும் அணைத்துவைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, சத்தியமூா்த்தியின் நண்பா்களை போலீஸாா் தேடிவந்தனா்.
இந்த கொலையில் தினகரன் (22), சுதாகா் (23), நிதீஷ்குமாா் (24), ராஜ்குமாா் (26) உள்ளிட்ட 6 பேருக்கும் தொடா்பு இருப்பதை போலீஸாா் உறுதிசெய்தனா். இதையடுத்து, அவா்களைக் கைதுசெய்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கடந்த 1 ஆம் தேதி மாலை சத்தியமூா்த்தி தனது நண்பா்களுடன் பஞ்சப்பள்ளியை அடுத்த வேடம்பட்டி வனப்பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பா்கள் 5 பேரும் சத்தியமூா்த்தியை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இளைஞரைக் கொலை செய்த அவரது நண்பா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.