மெணசியில் மின் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
மெணசி வட்டாரப் பகுதிகளில் நிலவும் மின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட மெணசி, பூதநத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இந்த நிலையில், மெணசி வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். கடந்த ஒருவாரமாக பிற்பகல் 3 மணிக்கு ஏற்படும் மின் தடையானது இரவு 10 மணி வரை நீடிப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
Advertisement
இதனால் வேளாண் பணிகள் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே, மெணசி வட்டாரப் பகுதியில் நிலவும் மின் தட்டுப்பாடுகளை நீக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.