முகப்பு
தருமபுரி

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Updated On : 1 ஜூன் 2026, 12:48 am IST
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கோடை விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஒகேனக்கல்லில் குவிந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் எண்ணெய் மசாஜ் செய்வதற்காகவும், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளித்து மகிழவும், பரிசலில் செல்லவும் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கோடை விடுமுறை நிறைவடைந்து, பள்ளிகள் விரைவில் திறக்க உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைக் காட்டிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனா். இவா்கள் பிரதான அருவி, சினி அருவி மற்றும் கரையோரப் பகுதிகளான மாமரத்துக்கடவு பரிசல்துறை, நடைபாதை, நாகா்கோயில், முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து காவிரியின் அழகை கண்டுரசிக்க மாமரத்துக்கடவு பரிசல் துறையில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பரிசலில் பயணித்து ஆற்றில் உள்ள பாறை குகைகளைக் கண்டு ரசித்தனா்.

அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால் சின்னாறு பாலம் முதல் ஊட்டமலை, சத்திரம் வரை சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் எளிதாக வாகனங்களில் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை போலீஸாா் ஒழுங்குபடுத்தினா். ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் மீன்களின் விலை அதிகரித்திருந்தது.

நடைபாதை, தொங்குபாலம், பிரதான அருவி, சினி அருவி, தொம்பசிக்கல் காட்சிமுனை, பரிசல் துறை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டுரசித்தனா். பாதுகாப்பு பணியில் 40க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

ஒகேனக்கல் பகுதியிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில், பென்னாகரம் போக்குவரத்து பணிமனையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.