முகப்பு
தருமபுரி

ஆர்வம்,  முயற்சி, சத்தியத்தின் முன்னுதாரணம் காமராஜர்: அமைச்சர் அன்பழகன் புகழாரம்

ஆர்வம்,  முயற்சி,  சத்தியம் ஆகியவை இருந்தால் யாரும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு முன்னாள் முதல்வர் காமராஜர் என

Updated On : 23 ஜூலை 2018, 9:26 am IST
பகிர்:

ஆர்வம்,  முயற்சி,  சத்தியம் ஆகியவை இருந்தால் யாரும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு முன்னாள் முதல்வர் காமராஜர் என புகழாரம் சூட்டினார் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.
தருமபுரி பாரத மாதா ஆன்மிக சேவை மையம் சார்பில் அரசின் பாரத மாதா ஆலய அறிவிப்பு,  இதற்காக தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்ட குமரி அனந்தனுக்குப் பாராட்டு விழா,  காமராஜர் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இந்த விழாவில் அமைச்சர் அன்பழகன் பேசியது:
தருமபுரி அதியமான்கோட்டத்தை அமைப்பதற்கு ரூ. 1.25 கோடியை ஒதுக்கியதும்,  இந்து சமய அறநிலையத் துறை மூலம் நிலம் பெற்றுத் தந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான்.  அவர் வழியில் செயல்பட்டுவரும் மாநில அரசு தற்போது தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு ஆலயம் அமைக்க முடிவு செய்துள்ளது. 
ஆலயத்துக்குத் தேவையான கூடுதல் நிதி அரசிடமே பெறவும் அல்லது மாற்று வழிகளையும் முயற்சிப்பேன்.
 காமராஜர்,  கல்வி நிலையங்களுக்குச் சென்று படிக்காதவராக இருந்தாலும்,  தீவிர வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.  அரசியல் இலக்கணம் என்ற ஆங்கிலப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்தவர் காமராஜர்.  அதனால்தான் மதுரையில் அரசுப் பல்கலைக்கழகத்துக்கு காமராஜரின் பெயரைச் சூட்டினார் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர்.
ஆர்வம், முயற்சி, சத்தியம் ஆகியவை இருந்தால் யாரும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு காமராஜர்.  அவர் காலத்தில்தான் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் அமைக்கப்பட்டன.  காமராஜர் அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் என்றார் அன்பழகன்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி பேசியது:
முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு தருமபுரி வந்த காமராஜரிடம் அப் பகுதி மக்கள் வலியுறுத்தியபடி,  கோணங்கிநாயனக்கனஅள்ளியில் அரசுப் பள்ளியைத் தொடங்க அந்த இடத்திலேயே உத்தரவிட்ட காமராஜர் காலத்தில்தான் கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை 15 லட்சத்திலிருந்து 45 லட்சமாக உயர்ந்தது.  அதனால்தான் அவர் கல்விக் கண் திறந்த காமராஜர் என்றழைக்கப்படுகிறார்.
காமராஜரின் காலத்தில் 10 அணைகள் கட்டப்பட்டன.  19 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.  6 சர்க்கரை ஆலைகள் உருவாக்கப்பட்டன.  அவரது பணிகளை மறக்காமல் நினைவு கூர்ந்து,  அவர் வழி நடந்தால் தமிழகம் தலைசிறந்த மாநிலமாக மாறும் என்றார் சின்னசாமி.
தருமபுரி மாவட்ட கம்பன் கழகத்தின் இலக்கிய அணிச் செயலர் ப. அறிவொளி,  கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் இலக்கிய அணிச் செயலர் க.சி. தமிழ்தாசன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். விழாவுக்கு ஆன்மிக சேவை மையத்தின் தலைவர் பி.என். குருராவ் தலைமை வகித்தார்.  அகில பாரத துறவியர் சங்கச் செயலர் சுவாமி ராமானந்தர் முன்னிலை வகித்தார். 
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி. சிற்றரசு,  ஆன்மிகத்தில் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் டிஎன்சி. மணிவண்ணன்,  வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியின் தலைவர் வருவான் எம். வடிவேலன் உள்ளிட்டோரும் வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக தகடூர் இரா. வேணுகோபால் வரவேற்றார்.  முடிவில் எம். மாரப்பன் நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments