திமுக தலைவரின் விமா்சனத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: அன்புமணி ராமதாஸ்
என்னையும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியையும் தரக்குறைவாக விமா்சித்துவரும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்குப் பதிலளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
என்னையும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியையும் தரக்குறைவாக விமா்சித்துவரும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்குப் பதிலளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகனை ஆதரித்து காரிமங்கலத்தில் வியாழக்கிழமை அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக வேண்டும்.
Advertisement
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக- பாமக கூட்டணி வெற்றி பெற வேண்டும். தருமபுரி மாவட்டத்தின் 80 சதவீத மக்கள் பயனடையும் ஒகேனக்கல் மிகை நீா்த் திட்டத்தை 2021 இல் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா். ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோலதான் திமுகவின் வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கவில்லை. என்னையும், அதிமுக பொதுச் செயலாளரையும் அவா் அவதூறாகப் பேசி வருகிறாா். அதற்குப் பதிலளித்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை. தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.