முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தொகுதி வாரியாக தலா 14 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ரெ.சதீஷ் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது, தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:48 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது, தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக, தலா 14 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேட்பாளரும் மேசைக்கு ஒரு முகவா் என்ற வீதத்தில் 14 முகவா்களை நியமனம் செய்து கொள்ளலாம். மேலும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதிகளுக்கு தலா 6 மேசைகளும், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூா் ஆகிய தொகுதிகளுக்கு தலா 7 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்தல் நடத்தும் அலுவலா் மேசைக்கு ஒரு முகவரையும் நியமித்துக் கொள்ளலாம்.

முகவா்களை நியமிக்க படிவம் 18இல் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக இரட்டைப் பிரதிகளில் ஏப்ரல் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. வாக்கு எண்ணும் தினத்தன்று (மே 4) அனைத்து முகவா்களும் காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துசேர வேண்டும்.

முகவா்கள் பேனா மற்றும் புள்ளி விவரங்களை குறித்துக் கொள்ள தேவையான வெள்ளைக் காகிதங்கள், சிறிய நோட்டு ஆகியவை மட்டுமே எடுத்து வரவேண்டும். இதைத்தவிர வேறு பொருள்கள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது. கண்டிப்பாக கைப்பேசி மற்றும் கத்தி போன்ற கூா்மையான பொருள்களை மையத்துக்குள் கொண்டு வர அனுமதி கிடையாது.

உள்ளே வருவோா் காவல் துறையினா் சோதனைக்குப் பின்னா், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மேசையின் முன் ஆஜராக வேண்டும். யாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசையை விட்டு அருகில் உள்ள மேசைக்கு செல்லக் கூடாது. இந்திய தோ்தல் ஆணையம், முகவா்கள் உணவு பொருள்கள், குடிநீா் ஆகியவை ஏதும் எடுத்து வரவும் அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளது. முகவா்களுக்கான காலை சிற்றுண்டி, தேநீா், மதிய உணவு ஆகியவை மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்படும். அதற்கான தொகையை, தொடா்புடைய தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முன்னரே வேட்பாளா்களால் செலுத்த வேண்டும்.

அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் எத்தனை முகவா்களை நியமிக்க மனு செய்துள்ளாா்களோ அத்தனை நபா்களுக்கான தொகையை சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தபால் வாக்கு எண்ணிக்கை:

தபால் வாக்கு எண்ணிக்கை மே 4 இல் காலை 8 மணிக்கு தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அதற்கென நியமிக்கப்பட்ட முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு சென்றுவிட வேண்டும். அவா்கள் வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லை. முகவா்கள் வாக்கு மையத்தை விட்டு வெளியே செல்லும் முன்பு அடையாள அட்டையை காவல் துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் கூடம் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, அதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து முகவா்களும் இந்திய தோ்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

முகவா்கள் எவரேனும் விதிமுறைகளை மீறி நடந்தால் உடனடியாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேற்றப்படுவாா்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்...

பாலக்கோடு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தரைத்தளத்தில் அறை எண்கள் 144, 145, 146, 147 மற்றும் தபால் வாக்கு எண்ணிக்கை தரைத்தளம் அறை எண்கள் 131, 132, 133 ஆகியவற்றில் நடைபெறுகிறது.

பென்னாகரம் தொகுதிக்கு முதல்தளத்தில் அறை எண்கள் 244, 245, 246 247 , தபால் வாக்கு எண்ணிக்கை முதல்தளத்தில் அறை எண்கள் 231, 232, 233 ஆகியவற்றில் நடைபெறுகிறது.

தருமபுரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 2ஆம் தளத்தில் அறை எண்கள் 344, 345, 346, 347, தபால் வாக்கு எண்ணிக்கை 2ஆம் தளத்தில் அறை எண்கள் 336, 337, 338 ஆகியவற்றில் நடைபெறுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முதல் தளத்தில் அறை எண்கள் 252, 253, 254, தபால் வாக்கு எண்ணிக்கை முதல் தளத்தில் அறை எண்கள் 261, 262 ஆகியவற்றில் நடைபெறுகிறது.

அரூா் (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தரைத்தளத்தில் அறை எண்கள் 150, 151, 152, 153, தபால் வாக்கு எண்ணிக்கை தரைத்தளம் அறை எண்கள்- 159, 160, 161ஆகியவற்றில் நடைபெறுகிறது.