காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கிருஷ்ணகிரி, பர்கூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கிருஷ்ணகிரி, பர்கூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பர்கூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் டி. செங்குட்டுவன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்டச் செயலாளர் இ.ஜி. சுகவனம், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர். ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கோரி, திமுகவினர் கிருஷ்ணகிரி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
அப்போது மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிநா நவாப், நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஊத்தங்கரையில் நடைபெற்றது.
ஊத்தங்கரை பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் எம்.ஆர். கஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் இரா. மணிகண்டன் முன்னிலை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, ஊத்தங்கரை வழக்குரைஞர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், திராவிட விடுதலை கழகம், ஊத்தங்கரை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.