ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 66 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 66 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டியக்கம் சார்பில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகம், தருமபுரியில் தொலைத்தொடர்பு நிலையம் முன்பும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பி.எம்.கெளரன், ம.சுருளிநாதன், பொன். ரத்தினம், ராசா ஆனந்தன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில், தொடக்கப் பள்ளியில் 88 சதவீதம் பேரும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 49 சதவீதம் பேரும், மாவட்டத்தில் பணியாற்றுவோரில் மொத்தம் 66 சதவீதம் ஆசிரியர்களும் பங்கேற்றனர். இதேபோல, அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர், அரசு ஊழியர்கள் சுமார் 10 சதவீதத்துக்கும் அதிகமானோர் இப் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையின்றி, மாணவர்கள் மட்டுமே காணப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில்...
9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், சேகர், ஹரி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், நந்தகுமார், மாதப்பன், அப்பாசாமி, நிர்வாகிகள் பிரபாவதி, கௌரிசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகளை இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை
எழுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 37 சதவீத அரசு ஊழியர்கள் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
பாலக்கோட்டில்...
பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ -ஜியோ அமைப்பை சேர்ந்த
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவபிரகாசம் ,
பொறுப்பாளர்கள் குணசேகரன், ஜனார்த்தனன், கோவிந்தன், சந்திரசேகர், ஆனந்தகுமார், அருள்நாதன், பெஞ்சமின், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போச்சம்பள்ளியில்...
போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் வரவேற்றார். மதியழகன், நவீன்குமார், ஆனந்திமாலா, சந்திரசேகரன், ஜானிபாஷா, சக்தி, தனசேகரன் முருகேசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள்- ஆசிரியைகள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி முன்னிலை வகித்தார். இதில் தமிழக தமிழாசிரியர் கழக பொருளாளர் முனியப்பன் வரவேற்று பேசினார். இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும், 21மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், அரசு ஆணை எண் 56, 100 மற்றும்101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், 3500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவு, 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், ஆசிரியர் முன்னேற்றச் சங்கத் துணைத் தலைவர் லட்சுமணன், வட்ட பொருளாளர் பெருமாள் மற்றும் நிதி காப்பாளர் சாமிநாதன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் - ஆசிரியைகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். பென்னாகரம் வட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் - ஆசிரியைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால், பென்னாகரம், கிருஷ்ணாபுரம், கூத்தப்பாடி என சுற்று வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான தொடங்கப்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.