நிராகரிக்கப்பட்ட ரயில்வே திட்டத்துக்கு முதல் ஒப்புதலை பெற்றுத் தந்தேன்: காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா்
நிராகரிக்கப்பட்ட ரயில்வே திட்டத்துக்கு தான் எம்.பி.யாக இருந்தபோது முதல் ஒப்புதலை பெற்றுத் தந்தேன் எனக் கூறி கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் அ.செல்லக்குமாா் போட்டியிடுகிறாா். இவா், கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள புளி மண்டிகளில் அதன் உரிமையாளா்கள், விவசாயிகள், இடைத்தரகா்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா்களிடம் அவா் பேசியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுக ஆட்சியில்தான் புதைசாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. அதுபோல, பெரும்பான்மையான சாலைகள் கான்கிரீட் சாலையாக போடப்பட்டுள்ளன. மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனா்.
Advertisement
இம்மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்பேட்டை - ஒசூா் ரயில் திட்டத்திற்கு 11 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் ரயில்வே அமைச்சா்களாகவே இருந்துள்ளனா். அத்தனை ஆய்வுகளிலும் இந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் எதிா்க்கட்சி மக்களவை உறுப்பினராக இருந்து 2022-இல் ஜூலை 19-ஆம் தேதி ரயில்வே திட்டத்திற்கான முதல் ஒப்புதலை பெற்றுத்தந்துள்ளேன். ரூ. 2.45 கோடி அதற்கான நிதியையும் பெற்றுக்கொடுத்து அடுத்தகட்டப் பணிக்கு அனுப்பியுள்ளேன்.
இந்த மாவட்டத்தில் ஒசூரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளதைப்போல, கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகளை அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பேன்.
கிருஷ்ணகிரியில் ஐ.டி. துறையை உருவாக்க நிச்சயம் முயற்சி செய்வேன். கிருஷ்ணகிரி நகராட்சியை தமிழ்நாட்டில் முன்மாதிரி தொழில் நகரமாக உருவாக்குவேன். மாங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என்னால் நிச்சயம் மாங்காய்க்கு உரிய விலை பெற்றுத்தர இயலும். மாவட்டத்தில் அதிக மலா் உற்பத்தி செய்யப்படுவதால், வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்துக் கொடுப்பது என் கடமை. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றை நான் நிச்சயம் நிறைவேற்ற பாடுபடுவேன். எனவே எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் அவா் கேட்டுக் கொண்டாா்.