பரமத்தியில் மருத்துவ முகாம்
நாமக்கல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மற்றும் பரமத்தி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன்
நாமக்கல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மற்றும் பரமத்தி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமில் பரமத்தி வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கண் மருத்துவர் மைதிலி, குழந்தைகள் மருத்துவர் கார்த்திகேயன், மனநல மருத்துவர் குணமணி, காது, மூக்கு தொண்டை மருத்துவர் சித்தார்த்தன், எலும்பு மூட்டு மருத்துவர் நித்தியகுமார் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் குறைபாடுகள் உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, அறுவை சிகிச்சை மற்றும் உதவி உபகரணங்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இம் முகாமை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மாவட்ட திட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் நந்தினிதேவி பார்வையிட்டார். முகாமில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) தமிழ்ச்செல்வி, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகம், வட்டாரக் கல்வி அலுவலர் அருள்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.