முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் தோல் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை

பட்டியலின மக்களின் மேன்மைக்காக, நாமக்கல்லில்  தோல் தொழிற்சாலை அமைய உள்ளதாக, தேசிய தாழ்த்தப்பட்டோர்

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:25 am IST
பகிர்:

பட்டியலின மக்களின் மேன்மைக்காக, நாமக்கல்லில்  தோல் தொழிற்சாலை அமைய உள்ளதாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியது; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தங்களுடைய குறைகளை தெரிவிக்க, சென்னை, தில்லி போன்ற நகரங்களுக்குச் செல்ல முடியாது என்பதாலும், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவர் என்பதாலும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உருவானதும்,  நாடு  முழுவதும் 220 மாவட்டங்களில் சிறப்பு குறைதீர் மையம் உருவாக்கப்பட்டது.
பல்வேறு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.100 கோடிக்கும் மேல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை என்பதை செயல்படுத்தி உள்ளோம். மேலும்,  பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 95 சதவீதம் பேருக்கு மருத்துவக் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
"முத்ரா' வங்கி திட்டத்தில், இந்தியாவில் தமிழக மக்கள் தான் அதிகம் பயன்பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் அதிகளவில் பயனடைந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொழில் தொடங்கி மேம்பாடு அடைய மத்திய அரசு ரூ.490 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், நாமக்கல் மாவட்டத்தில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை கண்டறிந்து உதவிடவும், தொழிற்பயிற்சி அளிக்கவும் வட்டம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 
நாமக்கல் மாவட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுடன், இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, பட்டியலின மக்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்கிறது. ரூ.490 கோடி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் செய்து வருகிறோம்.
 குறிப்பாக, நாமக்கல்லில் தோல் தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி முதல் ஒசூர் வரையில் பாதுகாப்பு முனையம் அமைய உள்ளது. இதன் மூலம் பட்டியலினத்தை சார்ந்த மக்கள் அதிகம் பயன்பெறுவர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.