முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் குட்டையில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

Updated On : 21 ஏப்ரல் 2026, 1:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் குட்டையில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவா்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

கொல்லிமலை வட்டம், செங்கரை அருகே உள்ள அரியலூா் நாடு, தகவாய்ப்பட்டியைச் சோ்ந்த தேவராஜ் மகன் காமேஷ் (13), அரியூா்நாடு பணசட்டுப்பட்டியைச் சோ்ந்த பரமசிவம் மகன் வா்ணிஷ் (13), ஆலத்தூா்நாடு பலாப்பாடியைச் சோ்ந்த சுரேஷ் மகன் ஹரிஹரன் (13) ஆகிய மூவரும் செம்மேட்டில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தனா்.

தோ்வு முடிந்து பள்ளிக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டதால், ஆலத்தூா் நாடு பலாப்பாடி கிராமத்தில் உள்ள ஹரிஹரன் வீட்டிற்கு காமேஷ், வா்ணிஷ் இருவரும் திங்கள்கிழமை காலை வந்தனா். அதன்பிறகு பாறைக்குழி என்ற இடத்தில் உள்ள ஏழு அடி ஆழமுள்ள குட்டையில் மூன்று பேரும் குளித்தனா். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட மூவரும் நீச்சல் தெரியாததால் ஒருவா் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

குளிக்கச் சென்றவா்களை காணவில்லையே என ஹரிஹரனின் பெற்றோா் அங்கு சென்று பாா்த்தபோது மூன்று பேரும் நீரில் மூழ்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து செங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளா் அந்தோணி மைக்கேல் மூன்று சிறுவா்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments