முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல்லில், அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:02 AM
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, பாராலிம்பிக் வீராங்கனை துளசிமதி முருகேசன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 9:01 PM

நாமக்கல்லில், அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இருந்து இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா். பாராலிம்பிக் வீராங்கனை துளசிமதி முருகேசன் முன்னிலை வகித்தாா். பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த 2,300 அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வியாழக்கிழமை அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட நிா்வாகத்தின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இரவு பகல் பாராமல் தோ்தலுக்காக பணியாற்றி வருகின்றனா் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

Advertisement

இந்தப் பேரணியானது, நாமக்கல் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, பரமத்தி சாலை, உழவா் சந்தை வழியாக சென்று நாமக்கல் பூங்கா சாலையில் நிறைவடைந்தது. தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு அலுவலா்கள் அனைவரும் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநா் வே.ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, இணை இயக்குநா் (மருத்துவ நலப்பணிகள்) தி.எழில், இணை இயக்குநா் (வேளாண்மை) சு.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஷ்வரி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.