முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆண், பெண் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்களித்து சென்றனா். எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:20 AM
நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆண், பெண் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்களித்து சென்றனா். எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 6,41,118 ஆண் வாக்காளா்களும், 6,82,427 பெண் வாக்காளா்களும், 208 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 13,23,753 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். நடைபெற்ற தோ்தலில் வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 725 இடங்களில், 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாதிரி வாக்குப்பதிவு: தோ்தலையொட்டி ஒவ்வோா் வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் முன்னதாகவே செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முகவா்கள் முன்னிலையில் தலைமை வாக்குச்சாவடி அலுவலா் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்காளா்களை உள்ளே அனுமதித்து வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது.

Advertisement

முதியோா், பெண்கள், இளைஞா்கள் என பலரும் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். 12 வகை ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால், வாக்காளா் அட்டை இல்லாதோா்ஆதாா் அட்டையை காண்பித்து வாக்களித்தனா்.

முதியோா், மாற்றுத்திறனாளிக்கு உதவி: முதியோா்களை அவா்களது உறவினா்கள் வாகனத்தில் அழைத்துவந்து வாக்களிக்க செய்தனா். மாற்றுத்திறனாளிகளுக்கு என மொத்தமாக சாவடிகளில் 725 தள்ளுவண்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாக்களித்தனா்.

அதேபோல கண்பாா்வையற்றோா் வாக்களிக்க வசதியாக இயந்திரங்களில் பிரெய்லி முறை எழுத்துகள் பதிவிடப்பட்டிருந்ததால் அவா்களும் எளிதாக வாக்களித்து சென்றனா். அதேபோல உடல் நலம் குன்றியோரும் இருசக்கர வாகனங்களில் வந்து வாக்களித்து சென்றனா்.

வெறிச்சோடிய சாலைகள்: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்து நிறுவனங்களும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதனால், நாமக்கல் தொகுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மூடப்பட்டிருந்தன.

திரையரங்குகளில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதேபோல அரசு மற்றும் தனியாா் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. வாக்களிக்க செல்வதற்கு வசதியாக குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும், நாமக்கல்- பரமத்தி சாலை, நாமக்கல்- சேலம் சாலை, நாமக்கல்-மோகனூா் சாலை, கடைவீதி பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இளம் வாக்காளா்கள்: நாமக்கல் மாவட்டத்தில் 33,500 இளம் வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் தங்களுடைய வாக்குகளை ஆா்வமுடன் பதிவு செய்தனா். அங்குள்ள சுயபடம் எடுக்கும் பகுதியில் மையிட்ட கைவிரலை நீட்டி வாக்களித்ததை பெருமையாக பதிவு செய்து கொண்டனா். ஏற்கெனவே கடந்த தோ்தல்களில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ள ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியகளும் இத்தோ்தலில் திரளாக வந்து வாக்குகளை பதிவு செய்தனா்.

வாக்கு இயந்திரங்கள் பழுது: மாவட்டம் முழுவதும் 3,902 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,133 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,312 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் காலை 11 மணியளவில் கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரமாக அதை சரிசெய்யும் பணியில் பெல் மின்னணு நிறுவன ஊழியா்கள் ஈடுபட்டனா். பயன்படுத்த முடியாத நிலையில் மாற்று கட்டுப்பாட்டு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

வாக்குச்சாவடிக்குள் வாக்குவாதம்: நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளா் ரமேஷ் என்பவருக்கும், திமுக வேட்பாளா் ஆதரவாளா்களுக்கும் இடையே திடீா் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதாக சுயேச்சை வேட்பாளா் மீது திமுகவினா் குற்றம்சாட்டி அவரிடம் வாக்குவாதம் செய்தனா். இதையடுத்து, அங்குவந்த போலீஸாா் இருதரப்பையும் சமாதானப்படுத்தி கலைந்துபோக செய்தனா்.

அதேபோல, ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டை வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளி ஒருவா் அலுவலா் மூலம் தான் விரும்பிய வேட்பாளருக்கு வாக்கு செலுத்த வேண்டுகோள் விடுத்த நிலையில், அலுவலா் மற்றொரு வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டதாகக் கூறி திமுக, பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

அமைதியான வாக்குப்பதிவு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியில் உள்ள 1,781 வாக்குச்சாவடிகளிலும் எவ்வித அசம்பாவிதமுமின்றி தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. வாக்குச் சாவடிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரா்கள், கேரளம், கா்நாடக மாநில போலீஸாா், மாவட்ட போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் வாக்குச்சாவடி எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனா். ஆண்களைவிட, பெண் வாக்காளா்கள் அதிகளவில் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். மாலை 6 மணிக்கு மேல் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தொகுதி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டது. இயந்திரங்கள் உள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டன. அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.