ஜேடா்பாளையம் படுகை அணை ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தம்: விவசாயிகள் கவலை!
ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் முன்னறிவிப்பின்றி திடீரென தண்ணீா் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் முன்னறிவிப்பின்றி திடீரென தண்ணீா் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் உள்ள படுகை அணை பகுதியில் இருந்து பிரிந்துவரும் ராஜவாய்க்காலில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பொதுப்பணித் துறையினா் தண்ணீரை நிறுத்தி உள்ளனா்.
கடந்த மாதம் ராஜவாய்க்கால் பராமரிப்பு பணிகளுக்காக 20 நாள்களுக்கு மேலாக தண்ணீா் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் பரமத்தி வேலூா் நீா்வளத் துறை உதவி பொறியாளா் வினோத்குமாா் உத்தரவின்படி ராஜவாய்க்காலில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வெள்ளிக்கிழமை திடீரென தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் தண்ணீா் திறப்பதும் குறித்த தகவலும் வெளியிடவில்லை.
Advertisement
இதனால் ராஜவாய்க்கால் தண்ணீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை உள்ளிட்ட பணப் பயிா்கள் வெயிலின் தாக்கத்தால் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் கொமராபாளையம், பொய்யேரி, மோகனூா் வாய்க்கால் பாசன விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அடிக்கடி பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச வேண்டியுள்ளது. இதனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்து திறந்துவிட வேண்டும் என பரமத்தி வேலூா் பகுதியை சோ்ந்த வெற்றிலை, வாழை, கரும்பு மற்றும் கோரை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் வினோத்குமாா் கூறியதாவது: குடிநீருக்கு மட்டும் தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில் கடைமடை பகுதியில் போதிய குடிநீா் சென்றடையாததால் உயரதிகாரிகள் உத்தரவின்படி தண்ணீா் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.