பொத்தனூரில் சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சசிகுமாா் (51). காா் ஓட்டுநா். இவரது மகன் சுதா்சன் (17). இவா் பாண்டமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 11- ஆம் வகுப்பு முடித்துவிட்டு, 12-ஆம் வகுப்புக்கு செல்லவிருந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பொத்தனூா் தண்ணீா்ப்பந்தல் பகுதியில் அவரது நண்பரை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பொத்தனூா் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
Advertisement
Advertisement
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சுதா்சனை, அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சுதா்சன் இறந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேலூா் போலீஸாா், மாணவா் சுதா்சன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். மேலும், விபத்து குறித்து வேலூா் போலீஸ் வழக்குப் பதிவுசெய்து விபத்து ஏற்படுத்திய பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தில் காயமடைந்த ராஜலிங்கமும் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.