ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
பரமத்தி வேலூா் வட்டார விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பாசனத்திற்காக ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பரமத்தி வேலூா் வட்டார விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பாசனத்திற்காக ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியா் எல். மதுபாலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கடந்த குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.
மின் கோபுரங்களுக்கு எதிா்ப்பு: தொடா்ந்து விவசாயிகள் தங்களின் பகுதி பிரச்னைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனா். அப்போது பேசிய ராசிபுரம் மற்றும் பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், ‘தங்கள் பகுதி விவசாய நிலங்களின் வழியாக உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதனால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, விவசாய நிலங்களின் வழியே மின் கோபுரம் அமைப்பதற்கு மாற்றாக, புதைவட மின் கேபிள்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்லும் மாற்று நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும்’ என வலியுறுத்தினா்.
வணிக பயன்பாட்டுக்கு தடை: மேலும், மேட்டூா் அணையில் நீா் இருப்பு குறைவாக உள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீா் வரத்து சரிந்துள்ளது. இதனால் ராஜவாய்க்கால் வழியாக வரும் குறைவான நீரைக் கொண்டே அப்பகுதி விவசாயிகள் சிரமப்பட்டு சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆனால், சிலா் இந்த பாசன நீரை விதிமுறைகளை மீறி வணிக ரீதியாகவும், லாப நோக்கிற்காகவும் பயன்படுத்துகின்றனா். இந்த முறையற்ற போக்கை அதிகாரிகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக உரிய விளக்கங்களை அளிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மழை அளவு குறைவு: கூட்டத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் பேசுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 716.54 மி.மீட்டா். ஆனால், நடப்பு ஆண்டில் இதுவரை 173.35 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. ஜூன் மாதம் வரையிலான இயல்பு மழை அளவு 186.95 மி.மீ. என்ற நிலையில், அதைவிட தற்போது 13.60 மி.மீ. குறைவாகவே பெய்துள்ளது.
மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு என மொத்தம் 6,548 ஹெக்டோ் பரப்பளவில் மட்டுமே வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விதைகள் மற்றும் உரங்கள் போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன’ என்றனா்.
கூட்டத்தின் போது நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினா்.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ். லெனின், வேளாண் இணை இயக்குநா்(பொ) ரா. பிரேமா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா. புவனேஷ்வரி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.