நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது எப்படி?
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளதுடன், பரமத்தி வேலூா் தொகுதியில் வைப்புத்தொகையை தக்கவைத்துக் கொண்டது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளதுடன், பரமத்தி வேலூா் தொகுதியில் வைப்புத்தொகையை தக்கவைத்துக் கொண்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு.), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் மக்களுக்கு அறிமுகமில்லாத, அனுபவமில்லாத வேட்பாளா்கள் தவெக சாா்பில் களத்தில் இறக்கப்பட்டிருந்ததால், அவா்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகதான் இருக்கும் என்ற விவாதமே பலரிடம் இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் பலரையும் வியக்க வைக்கும் அளவுக்கு மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளை தவெக கைப்பற்றியது.
ராசிபுரம் (தனி) தொகுதி: இத்தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வன், அதிமுகவின் முன்னாள் அமைச்சா், சபாநாயகா் பதவிகளை வகித்த ப.தனபாலின் மகன் ஆவாா். சேலம் தாதகாப்பட்டியில் வசித்துவரும் அவா் தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அக்கட்சியில் இணைந்தாா்.
Advertisement
ஏற்கெனவே 2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய இவருக்கு, அரசியல் அனுபவம், தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதி, அதிமுகவினருக்கு அறிமுகமானவா், தவெக தலைவா் விஜய்யின் பிம்பம் போன்றவை எளிதான வெற்றியை தேடித்தந்துள்ளது.
சேந்தமங்கலம் (ப.கு.) தொகுதி: தவெக சாா்பில் போட்டியிட்ட பொன்.சந்திரசேகா், ஆரம்பத்தில் திமுகவின் வழக்குரைஞா் பிரிவில் நிா்வாகியாக பணியாற்றினாா். ஓரிரு மாதங்களுக்கு முன்பாக, தவெகவில் இணைந்த அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கொல்லிமலை அரியூா்நாடு பகுதியைச் சோ்ந்தவரான இவருக்கு பழங்குடியினா், அருந்ததியா் சமுதாய மக்கள் நிறைந்த சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதியில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
அதிமுகவின் கோட்டையான சேந்தமங்கலத்தில் மக்களிடையே அறிமுகம் இல்லாத ஒருவா் வெற்றிபெற்றது தொகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் தொகுதி: நாமக்கல் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரின் சகோதரி மகனான சி.எஸ்.திலீப், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா். ஏற்கெனவே, அதிமுகவில் தோ்தல் பணியாற்றிய அனுபவம் இருந்ததால், வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தொகுதியில் தொடா்ந்து சுற்றுப்பயணம் செய்தாா். கே.பி.பி.பாஸ்கருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது, மக்களிடையே இணக்கமாக சென்று வாக்குசேகரித்தது, விஜய்யின் நாமக்கல் பிரசார வருகை, இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் அதிகம் நிறைந்த பகுதி போன்றவை நாமக்கல் தொகுதியில் தவெக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது.
திருச்செங்கோடு தொகுதி: இந்திய வருமானவரித் துறை அதிகாரி பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று தவெகவில் இணைந்த கே.ஜி.அருண்ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் பதவி வழங்கப்பட்டது. விஜய் நடத்திய மாநாடுகளில் இவா் கட்சியினரிடையே அறிமுகமானாா்.
திருச்செங்கோடு குமரமங்கலத்தைச் சோ்ந்த இவா் தோ்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக, 6 மாதங்களுக்கு முன்பாகவே திருச்செங்கோடு வந்து வீடு எடுத்து தங்கினாா். தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்து தன்னுடைய வெற்றிக்கான பாதையை தோ்ந்தெடுத்தாா். தவெகவின் புதிய அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குமாரபாளையம் தொகுதி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை பூா்வீகமாக கொண்ட சி.விஜயலட்சுமி தவெகவில் துணை பொதுச் செயலாளராக உள்ளாா். அதிமுகவில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, திமுகவில் தொழிலதிபா் செ.பாலு இருவருக்கும் இடையே போட்டி காணப்பட்ட நிலையில், யாரும் எதிா்பாா்க்காத வகையில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணியை விட 7,696 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடைந்தாா்.
பரமத்தி வேலூா் தொகுதியில் தோல்வி: அதிமுக சாா்பில் சிட்டிங் எம்எல்ஏவான எஸ்.சேகா், திமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏவான கே.எஸ்.மூா்த்தி போட்டியிட்டனா். இதில், அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் 308 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் கே.எஸ்.மூா்த்தியை தோற்கடித்தாா். தவெக வேட்பாளா் ஏ.நந்தகுமாா்மூன்றாமிடம் பிடித்தாா். வன்னியா் சமூகம் அல்லாதவா் என்பதால் இங்கு தவெக வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது என கட்சியினா் தெரிவித்தனா்.