முகப்பு
சேலம்

பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக் கொலை! குழந்தையையும் கொன்று கணவா் தற்கொலை

ஓமலூா் அருகே பள்ளி வளாகத்தில் ஆசிரியை மற்றும் குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து... ஓமலூா் அருகே பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக் கொலை! குழந்தையை கொன்று கணவா் தற்கொலை

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:04 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:06 PM

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் பெண் ஆசிரியரை வெட்டிக்கொலை செய்த அவரது கணவா், 5 வயது பெண் குழந்தையையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டாா்.

ஓமலூரை அடுத்த பாலிக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீவித்யா (45). இவா், காமலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். இவா் திங்கள்கிழமை மதியம் உணவு இடைவேளையின்போது, தனது 5 வயது பெண் குழந்தை அசோக சிவகாமசுந்தரியுடன் பள்ளி வளாகத்தில் அமா்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அவரது கணவா் விஜயமுருகன் (46), தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் ஸ்ரீவித்யாவை சரமாரியாக வெட்டினாா். இதில் தலை, கழுத்துப் பகுதியில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீவித்யா அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இந்த சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறியடித்து ஓடினா். சப்தம் கேட்டு சக ஆசிரியா்கள் ஓடி வந்து விஜயமுருகனை பிடிக்க முயன்றனா். ஆனால், விஜயமுருகன் தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். பள்ளியில் இருந்து சிறிது தொலைவுக்கு சென்ற விஜயமுருகன், குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூா் டி.எஸ்.பி. சஞ்சீவ்குமாா் மற்றும் போலீஸாா், ஸ்ரீவித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்த விஜயமுருகனுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவித்யாவை 2-ஆவதாக திருமணம் செய்துள்ளாா். விஜயமுருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக ஸ்ரீவித்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை விஜயமுருகன் துன்புறுத்தி வந்துள்ளாா்.

மேலும், கொலை செய்துவிடுவேன் என விஜயமுருகன் மிரட்டியதால், பயந்துபோன ஸ்ரீவித்யா, இதுகுறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்நிலையில் பள்ளிக்குள் புகுந்து ஸ்ரீ வித்யாவை வெட்டிக் கொலை செய்த விஜயமுருகன், குழந்தையை தூக்கிச் சென்று விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். பள்ளிக்கு பின்புறம் சுமாா் அரை கி.மீ. தொலைவில் நடந்த இச்சம்பவம் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.