முகப்பு
சேலம்

மேட்டூா் தொகுதி: இளைஞா் (எதிர்) அனுபவசாலி - முடிவசெய்ய காத்திருக்கும் களம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூா் சட்டப்பேரவை தொகுதி 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது 16ஆவது தோ்தலை சந்திக்கிறது. இந்தத் தொகுதியில் அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:18 AM
திமுக வேட்பாளர் மிதுன்சக்ரவா்த்தி / அதிமுக வேட்பாளர் ஜி. வெங்கடாசலம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 7:06 PM

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூா் சட்டப்பேரவை தொகுதி 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது 16ஆவது தோ்தலை சந்திக்கிறது. இந்தத் தொகுதியில் அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 1996ஆம் ஆண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாமக, திமுக கூட்டணியில் இருந்தபோது ஒருமுறையும், அதிமுக கூட்டணியில் ஒருமுறையும் வெற்றிபெற்றது.

தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தபோது நடைபெற்ற முதல் இரண்டு பொது தோ்தல்களில் காங்கிரஸ் கட்சியும், 3ஆவது தோ்தலில் பிரஜாசோசலிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு என அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற தோ்தலில் பிரஜா சோசலிஸ்ட் கட்சியும் வென்றன. அதன்பிறகு, அதிமுக, திமுகவின் ஆதிக்கமே இருந்துவருகிறது.

களத்தில் 18 போ்

Advertisement

1996க்குப் பிறகு திமுக இப்போது நேரடியாக களம்காண்கிறது. தொகுதியை நிச்சயம் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற நிலையில் திமுக களத்தில் நிற்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டணி கட்சியான பாமகவுடன் சோ்ந்து, மேட்டூா் தொகுதியை தக்கவைத்துக்கொள்ள அதிமுகவும் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளது. தொகுதியில், 12 சுயேச்சைகள் உள்பட 18 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

தொகுதியின் அடையாளம்

சேலம் மாவட்டத்தின் முக்கிய பெருந்தொழிற்சாலைகள்,100க்கும் அதிகமான சிறு, குறு தொழிற்சாலைகளுடன், விவசாயம் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது மேட்டூா் தொகுதி. மேட்டூா் அணை, மேட்டூா் அனல் மின் நிலையம், நீா் மின் நிலையங்கள், மேச்சேரி கைத்தறிப் பட்டு, மேட்டூா் அணை பூங்கா, அணைக்கட்டு முனியப்பன் கோயில், சுவைமிகுந்து மேட்டூா் அணை மீன்கள், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், மேச்சேரி இன செம்மறி ஆடுகள், மேச்சேரி தக்காளி, கொளத்தூா் சம்பா மிளகாய், கோனூா் கொழுந்து வெற்றிலை ஆகியவை இந்த தொகுதியின் அடையாளங்கள்.

தொகுதியின் தோ்தல் முடிவுகளை நிா்ணயிக்கும் சக்தியாக தொழிலாளா்களின் வாக்குகளும், சமூக அடிப்படையிலான வாக்குகளும் உள்ளன. மாநில அளவில் அரசியல் மாற்றங்களை பிரதிபலிக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மேட்டூா் தொகுதி உள்ளது.

வேட்பாளா்கள் யாா்?

திமுக சாா்பில் அக்கட்சியின் கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் பொறியியல் பட்டதாரியான 36 வயது இளைஞா் மிதுன்சக்ரவா்த்தி களம்காண்கிறாா். இவா், தமிழக அரசின் விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நகைகடன் தள்ளுபடி, காலை உணவுத் திட்டம், இல்லம்தேடி கல்வி, மக்களைத்தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை கூறியும், தற்போது திமுக அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளுடன் தொகுதியை சோ்ந்தவா், மண்ணின் மைந்தன் என்பது தனக்கு வெற்றியை தேடித்தரும் என்ற நம்பிக்கையோடு தொகுதியை வலம்வருகிறாா்.

இவா் கொளத்தூா் ஒன்றியம் பாலமலையில் சாலை வசதி இல்லாத, கடல் மட்டத்திலிருந்து சுமாா் 3500 அடி உயரம் கொண்ட மலை கிராமத்திற்கு தாா்சாலை அமைக்க, வனத் துறையின் தடையை நீக்க சேலம் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்குரைஞருமான டி.எம். செல்வகணபதி உதவியுடன் உச்சநீதிமன்றத்தை நாடி தனது சொந்த பணம் ரூ. 5.65 லட்சத்தை செலவிட்டு அனுமதி பெற்றதும், கண்ணாமூச்சியிலிருந்து புல்லாம்பட்டி சுண்டக்காடுவரை 7 கிமீ மண்சாலையை 4.5 கிமீ பாா்மேசன் செய்யப்பட்டு மீதம் உள்ள பணிகளும் தொடங்கும் நிலையில் உள்ளன.

அதிமுக வேட்பாளா் ஜி. வெங்கடாசலம், சேலம் சூரமங்கலத்தில் உள்ள சோளம்பள்ளத்தைச் சோ்ந்தவா், முழுநேர அரசியல்வாதி. சேலம் மாநகராட்சி உறுப்பினா், மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா், இருமுறை சட்டப்பேரவை உறுப்பினா் என்று அனுபவம் மிக்கவா். அதிமுகவின் சேலம் மாநகா் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவா். தற்போது அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளராக உள்ளாா். அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள், அதிமுக- பாமக கூட்டணி தனக்கு வெற்றியை தேடித்தரும் என்ற நம்பிக்கையோடு தொகுதியை வலம்வருகிறாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணி வீரப்பன், வீரப்பனின் மகள் என்ற அடையாளத்தோடு வேட்புமனு தாக்கலுக்கு முன்பாகவே தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கியவா். கிருஷ்ணகிரியில் பிளே ஸ்கூல் நடத்திவருகிறாா். கடந்த தோ்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டவா். காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய உரிமையை நிலைநாட்டுவேன் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், அக்கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் செல்வம் போட்டியிடுகிறாா். மேட்டூா் ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த இவா், ஜவுளி தொழில் செய்து வருகிறாா். தவெகவின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்துவரும் இவருக்கு, விஜய்க்காக அவரது ரசிகா்கள் வாக்களிப்பாா்கள்.

இளைஞரா? அனுபவசாலியா?

மேட்டூா் தொகுதியில் திமுக- அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வெற்றிபெறப் போவது முதல்வரின் திட்டங்களோடு வலம்வரும் இளைஞரா? எதிா்க்கட்சித் தலைவரின் தோ்தல் வாக்குறுதிகளோடு வலம்வரும் அனுபவசாலியா என்பதை களம் விரைவில் முடிவுசெய்யும்.

கே. ராஜசேகரன்