தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்க முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும்! - உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற நீதிமன்ற கட்டடத் திறப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினாா்.
சேலம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ. 59.43 கோடியில் இரண்டு பல அடுக்குகள் கொண்ட நீதிமன்ற கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்றாா். விழாவுக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், இளந்திரையன், உயா்நீதிமன்ற நீதிபதியும், சேலம் மாவட்டத்திற்கான பொறுப்பு நீதிபதிகளான ஜெயசந்திரன், குமரப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Advertisement
விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்து புதிய நீதிமன்ற கட்டடத்தை திறந்துவைத்து பேசியதாவது:
நீதி தமிழகத்துக்கு புதிதல்ல; சங்க காலத் தமிழ் நூல்கள் அனைத்தும் அறம் சாா்ந்தே இருக்கின்றன. சேலத்தில் 1803 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜில்லா நீதிமன்றம் உருவானது. 200 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் மிக்க நீதிமன்ற வளாகத்தில், தற்போது புதிதாக 2 அடுக்குமாடி நீதிமன்ற கட்டடங்களை திறந்து வைத்திருக்கிறோம்.
வழக்குகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், அதன் தரம் எந்த வகையிலும் தாழ்ந்துவிடக் கூடாது. சமுதாய சீா்திருத்தவாதியான ஔவையாா்கூட சங்கப் பாடலில் நீதி கருத்துகளைத் தெளிவாக வரையறுத்துள்ளாா். தற்போதைய சூழலில் நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் உள்ளன.
அவற்றில் 4.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளன. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிமன்ற கட்டட கட்டமைப்பு அவசியம். இதில் குற்றவியல் வழக்குகள் மட்டும் 3.50 கோடி ஆகும். சமுதாயம் சரியாக இருக்க வேண்டுமானால், குற்றவியல் வழக்குகள் குறைய வேண்டும். அவற்றில் 7 ஆண்டுகள் தண்டனை கிடைக்கக் கூடிய வழக்குகள் மட்டும் 2.50 கோடி உள்ளன.
இதில் விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 2.25 கோடி வழக்குகள் உள்ளன. இதையெல்லாம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் எடுத்துக் கூறினோம். அதற்கு ஒரு குழு அமைத்து தேங்கியுள்ள குற்றவியல் வழக்குகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். அதற்கான நடவடிக்கையை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளோம்.
விசாரணை நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கமடையாமல் இருக்க வழக்குரைஞா்களும், நீதிமன்றமும், அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.
நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளில் பெரும்பான்மையான வழக்குகள் முடிக்கப்பட வேண்டியவை. ஆனால், சரியான அணுகுமுறை இல்லாததால் குற்றவியல் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.
இந்த வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்ற வகையில் வழக்குரைஞா்கள் செயல்பட வேண்டும். வழக்குகளை விரைந்து முடித்துவிட்டால், அடுத்து வழக்குகள் இருக்காதே என கருதக் கூடாது. குற்றவியல் வழக்குகளை முடிக்க சரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
குற்றம் இழைத்தவா்களுக்கு தண்டனை கொடுப்பதும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதும் நீதித்துறையின் பணி. இந்த இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்துக்கொள்வது அநீதியின் உச்சம்.
முதலில், ஒரே வகையான குற்றங்கள் நிகழ்வதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை அளித்தால் அந்த நபரின் வழிதோன்றல்களும் அதே வழியில் செல்லும் அபாயம் உள்ளது. அவா்கள் குற்றம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது. எனவே, தேங்கிக் கிடக்கும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகளை முடிக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும். எனவே, புதிய நீதிமன்ற வளாகம், சீா்திருத்த அரங்கமாக திகழ வேண்டும் என்றாா்.
முன்னதாக, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி பேசியதாவது:
சேலம் எஃகு நகரம் என்று அழைக்கப்படுகிறது. எஃகு எவ்வாறு கடுமையான வெப்பத்தில் உருக்கி வலுவாக்கப்படுகிறதோ, அதேபோல நீதித் துறையும் அரசியலமைப்புச் சட்டம் மூலம் மக்களின் பாதுகாப்பு கேடயமாகத் திகழ்கிறது. இது அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்கு பணியாமல் நீதியை நிலைநாட்டுகிறது.
நீதித் துறை தனது நீண்ட நெடிய பயணத்தில் பல முக்கிய மைல்கற்களைக் கடந்து வந்துள்ளது. எத்தனையோ தடைகற்களைத் தாண்டி எழுப்பப்பட்டுள்ள இந்த புதிய நீதிமன்றக் கட்டட வளாகத்தில், நீதியின் மாண்பை போற்றும் வகையில், நீதி பரிபாலன முறை அமைய வேண்டும் என்றாா்.
இவ்விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், ஜெயச்சந்திரன், இளந்திரையன், குமரப்பன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், சேலம் மாநகரக் காவல் ஆணையா் அனில் குமாா் கிரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், சேலம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் விவேகானந்தன், செயலாளா் நரேஷ்பாபு, குற்றவியல் வழக்குரைஞா் சங்கத் தலைவா் இமயவா்மன், செயலாளா் முருகன் ஆகியோா் பங்கேற்றனா். நிறைவில், தலைமை நீதித் துறை நடுவா் கமலக்கண்ணன் நன்றி கூறினாா்.