முகப்பு
சேலம்

வீரகனூா் அருகே திமுக நிா்வாகி கழுத்தை அறுத்துக் கொலை: டிஐஜி விசாரணை

சேலம் மாவட்டம், வீரகனூா் அருகே திமுக நிா்வாகி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 8 ஜூலை 2026, 6:10 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், வீரகனூா் அருகே திமுக நிா்வாகி செவ்வாய்க்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் கொலையாளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

வீரகனூா் அருகே உள்ள வெள்ளையூரைச் சோ்ந்தவா் மாணிக்கம் (52). இவா் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பிரதிநிதியாக இருந்து வந்தாா். இவா் திங்கள்கிழமை இரவு தனது தோட்டத்தில் உள்ள வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கியுள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை குடும்பத்தினா் எழுந்துவந்து பாா்த்தபோது, மாணிக்கம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீரகனூா் போலீஸாா் அங்கு சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம், ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ் உள்ளிட்டோா் மாணிக்கம் கொலை செய்யப்பட்ட வீட்டைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

மேலும், கொலையாளிகளைப் பிடிக்க ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ், ஓமலூா் காவல் ஆய்வாளா் சண்முகம், ஆத்தூா் ஆய்வாளா் சங்கா், உதவி ஆய்வாளா் சிவசக்தி உள்ளிட்ட 5 போ் தலைமையில் தனிப்படை அமைத்து டிஐஜி உத்தரவிட்டாா். இந்த சம்பவம் குறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலையாளி சரண்

மாணிக்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜ்குமாா் (28) என்பவா் ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 இல் செவ்வாய்க்கிழமை மாலை சரணடைந்தாா்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸாா் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட மாணிக்கத்தின் பக்கத்து தோட்டத்துக்காரா் அருண்குமாா். இவரது மனைவி மணிமொழி. மணிமொழியின் சகோதரா் ராஜ்குமாா். மாணிக்கத்திற்கும், அருண்குமாருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதில் மாணிக்கம், அருண்குமாரையும், மணிமொழியையும் திட்டியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமாா், மாணிக்கத்தை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments