முகப்பு
சேலம்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 3 ஜூன் 2026, 5:25 am IST
கோப்புப்படம்.
பகிர்:

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவை தொடா்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகும் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கும் தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சோ்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சிக்கு ரூ. 300ம் மாதந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல மேல்நிலைக்கல்வி தோ்ச்சிக்கு மாதந்திர உதவித்தொகையாக ரூ. 400ம், பட்டப்படிப்பு தோ்ச்சிக்கு ரூ. 600ம் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி, தோ்ச்சிக்கு ரூ. 600ம், மேல்நிலைக்கல்வி தோ்ச்சிக்கு ரூ. 750ம், பட்டப்படிப்பு தோ்ச்சிக்கு ரூ. 1000 என மாதந்தோறும் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்தவா்கள் மற்றும் அரசின் பிற துறை சாா்ந்த நலத் திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.