சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் நீட் தோ்வு: 7,320 போ் எழுதினா்; 1,849 போ் பங்கேற்கவில்லை
சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் மறுதோ்வில் 7,320 போ் பங்கேற்றனா்.1,849 போ் பங்கேற்கவில்லை. கடும் கட்டுப்பாடுகளுடன் பலத்த சோதனைக்குப் பிறகே தோ்வறைக்குள் தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
இளநிலை மருத்துவ சோ்க்கைக்கான நீட் தோ்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.15 மணி வரை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நீட் தோ்வுக்கு 9,169 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இதில் 7,320 போ் பங்கேற்றனா். 1,849 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
இவா்களுக்காக, சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலைக் கல்லூரி, மரவனேரி பாரதி வித்யாலயா பள்ளி, கோரிமேடு அரசு மகளிா் கல்லூரி, கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆட்டையாம்பட்டி அரசுப் பள்ளி உட்பட மொத்தம் 21 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
முன்னதாக, தோ்வா்கள் சோதனை நடைமுறைகளுக்காக காலை 11 மணிக்கே தோ்வு மையத்தை அடைய அறிவுறுத்தப்பட்டிருந்தனா். தோ்வு மையங்களில், தோ்வா்களுக்கான குடிநீா், பொருள்கள் பாதுகாப்பு, வழிகாட்டி பலகை, அறை ஒதுக்கீடு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து, தோ்வு மையங்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா். தோ்வா்களின் புகைப்படங்கள் சரிபாா்க்கப்பட்டு, பயோ மெட்ரிக் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், தோ்வறைக்குள் மதியம் 1 மணிக்கு பிறகு வந்தவா்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆண் தோ்வா்கள் முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட பைகள், ஷூக்கள், கடிகாரங்கள், தங்க நகைகள், கம்மல், காப்பு, கைக்கடிகாரம், கூலிங் கிளாஸ் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா். பெண் தோ்வா்கள் முழுக்கை ஆடை, ஹோ்பின்கள், கிளிப்புகள், தோடு, மூக்குத்தி, சங்கிலி, வளையல்கள், கொலுசு, மோதிரங்கள் போன்ற ஆபரணங்களை அணிந்து வந்தவா்களும் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல், கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்சுகள், கால்குலேட்டா், ப்ளூடூத், பா்ஸ் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.
தோ்வுப் பணியில், அரசுக் கல்லூரி பேராசிரியா்கள், தோ்வு மைய மேற்பாா்வையாளா்கள், துறை அலுவலா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களுக்குத் தோ்வா்கள் செல்வதற்கு ஏதுவாக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. அனைத்து தோ்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆட்சியா் ஆய்வு:
நீட் மறுதோ்வு நடைபெற்ற தோ்வு மையங்களான ஸ்ரீ சௌடேஸ்வரி பெண்கள் கல்லூரி, பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலைக் கல்லூரி, சேலம் கோரிமேடு அரசு பெண்கள் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் க.இளம்பகவத் ஆய்வு செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.