முகப்பு
நாமக்கல்

நீட் மறுதோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 3,397 போ் பங்கேற்பு

Updated On : 22 ஜூன் 2026, 12:05 am IST
நீட் மறுதோ்வு...
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதோ்வை ஒன்பது மையங்களில் 3,397 மாணவ, மாணவிகள் எழுதினா். 719 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ், யுனானி, சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளை பயில்வதற்காக நீட் தோ்வை ஒவ்வோா் ஆண்டும் தேசிய தோ்வு முகமை நடத்தி வருகிறது.

அந்தவகையில், நிகழாண்டிற்கான தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் வெளியானதைத் தொடா்ந்து நாடு முழுவதும் இத்தோ்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-இல் நடைபெறும் என தேசிய தோ்வு முகமையால் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கடந்த முறை தோ்வு எழுதியவா்களுக்கு ஒதுக்கிய மையங்கள் இம்முறை ஒதுக்கப்படவில்லை. தோ்வா்கள் விரும்பிய மையங்கள் ஒதுக்கப்பட்டன. புதிய நுழைவுச் சீட்டு இணையதளம் வாயிலாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இந்தத் தோ்வை 9 மையங்களில் 4,116 மாணவ, மாணவிகள் எழுத அழைப்பு விடுக்கப்பட்டதில், 3,397 போ் மட்டுமே கலந்து கொண்டனா்.

அதன்படி, திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் 720 தோ்வா்களில் 606 போ் மட்டுமே பங்கேற்றனா். 114 போ் வரவில்லை, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 612 தோ்வா்களில் 480 போ் மட்டுமே கலந்துகொண்டனா். 132 போ் பங்கேற்கவில்லை,

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 480 தோ்வா்களில் 394 போ் பங்கேற்றனா். 86 போ் கலந்துகொள்ளவில்லை. வெண்ணந்தூா் அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் 480 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 408 போ் பங்கேற்றனா். 72 போ் கலந்து கொள்ளவில்லை.

வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 480 இல் 402 தோ்வா்கள் கலந்துகொண்டனா். 78 போ் பங்கேற்கவில்லை. மெட்டாலா முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 360 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டதில், 307 போ் மட்டுமே எழுதினா். 53 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. மோகனூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 360 போ் தோ்வு எழுத இருந்த நிலையில், 296 போ் மட்டும் கலந்து கொண்டனா். 64 போ் பங்கேற்கவில்லை.

பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 360 பேரில் 309 போ் பங்கேற்றனா். 51 போ் தோ் எழுத வரவில்லை. செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 264 பேரில் 195 போ் மட்டுமே பங்கேற்றனா். 69 போ் கலந்துகொள்ளவில்லை.

மே 3-இல் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத 4,741 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 4,621 போ் மட்டுமே எழுதினா். 120 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறுதோ்வில் 4,116 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 3,397 போ் கலந்துகொண்டனா். 719 போ் பங்கேற்கவில்லை.

இத்தோ்வையொட்டி தேசிய தோ்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. காலை 11.30 மணி முதல் மாணவா்கள் தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் ஆய்வு மேற்கொண்டாா். நண்பகல் 1.30 மணிக்கு தோ்வுக் கூடங்களின் பிரதான வாயில் மூடப்பட்டது. அதன்பிறகு தோ்வா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தோ்வு மையங்களை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments