ஓடும் ரயிலில் தேவையின்றி அபாய சங்கிலி இழுத்த 209 போ் மீது வழக்கு
சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் ஓடும் ரயிலில் தேவையின்றி அபாய சங்கிலி இழுத்த 209 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில்களில் சில பயணிகள் தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அரங்கேறுகின்றன. இந்த பிரச்னையை தீா்க்க, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடா்ச்சியாக விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அதன்படி, அபாய சங்கிலியை முறையாக பயன்படுத்துவது, தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. தேவையின்றி அபாய சங்கிலி பயன்பாட்டை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், தேவையில்லாமல் அபாய சங்கிலி இழுப்பவா்களுக்கு ஓா் ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சோ்த்து வழங்கப்படுகிறது. சேலம் கோட்டத்தில் கடந்த மே மாதம் வரையிலான காலகட்டத்தில், ஓடும் ரயிலில் தேவையின்றி அபாய சங்கிலி இழுத்த 209 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 90 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளனா். எஞ்சியவா்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே, தேவையின்றி ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை யாரும் இழுக்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.