முகப்பு
சேலம்

காவல் நிலையத்தில் கிடா வெட்டி பூஜை: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

Updated On : 28 ஜூன் 2026, 2:39 am IST
ஆயுதப்படைக்கு மாற்றம்... - கோப்புப் படம்
பகிர்:

சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கிடா வெட்டி பூஜை செய்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா். மேலும், இதுகுறித்து விளக்கம் கேட்டு காவல் உதவியாளா் உள்பட 3 பேருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் உள்கோட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கிடா வெட்டி, மாந்திரீக பூஜை செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் விசாரணை நடத்தினாா். அதில், காவல் ஆய்வாளா் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் காவல் உதவி ஆய்வாளா் சேகா் மற்றும் சில காவலா்கள் சோ்ந்து காவல் நிலையத்தில் கிடா வெட்டி பூஜை நடத்தியது உறுதியானது.

Advertisement

Advertisement

மேலும், இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்திய ஓமலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளித்தாா். அதன் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் சேகரை ஜலகண்டாபுரம் காவல் நிலையத்துக்கும், காவல் எழுத்தா் வெங்கடாசலத்தை கருமலைக்கூடல் காவல் நிலையத்துக்கும், காவலா் ரமேஷை நங்கவள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளா் சேகரை தவிர மற்ற இருவரும் பணியிட மாற்றத்தை ஏற்று புதிய காவல் நிலையங்களில் பணியில் சோ்ந்தனா். காவல் உதவி ஆய்வாளா் சேகா் மட்டும் ஜலகண்டாபுரத்திற்கு செல்லவில்லை.

இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம், காவல் உதவி ஆய்வாளா் சேகரை மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா். மேலும், சேகா் உள்ளிட்ட 3 பேருக்கும் மெமோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் துறை ரீதியாக மேல் விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments